திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல்நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62.63 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும்பரிசுப் பொருட்கள் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு கையூட்டு அளிப்பது மற்றும் சந்தேகப்படும்படியான பணப்பரிவர்த்தனைகள், பரிசுப் பொருட்கள், மது உள்ளிட்டவை விநியோகம்போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பறக்கும் படையும் மற்றும் கண்காணிப்புக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாராபுரம் (தனி), காங்கேயம், அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு,பல்லடம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 9 பறக்கும்படை குழுக்கள் மற்றும் 9நிலை கண்காணிப்புக் குழுக்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூர் வடக்கு, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய மூன்று தொகுதிகளில் கூடுதலாக இரண்டு பறக்கும் படை குழுக்கள் மற்றும் இரண்டு நிலை கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம்156 குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்துப் பணியின்போது தேர்தல் நடத்தை விதிகளின்படி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13,00,31, 534 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 16 பேரிடம், ரூ. 28,74,500 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது. எவர்சில்வர் தட்டு, வேட்டி, புடவைகள், பேக், மதுபானம், சிலைகள், பரிசுப் பொருள், குக்கர், தங்கம், டி-சர்ட், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ. 62,62,54,934 மதிப்பு பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.