தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிறந்த கே.எஸ்.கமாலுதீன், 10, 12ம் வகுப்பு தமிழ்வழி கல்வியில் பயின்றவர். கல்லூரி படிப்பு பி.எஸ்.சி கணக்கு ஆங்கில வழி கல்வி பயின்றார். பின்பு சென்னைக்கு கம்ப்யூட்டர் படிப்பதற்காக 1986ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார். கம்ப்யூட்டர் படிப்பதற்கு ஆர்வம் கொண்ட அவர் தி.நகரில் DCA, 1 வருட கல்வி பயின்றார். பல நிறுவனங்களில் முயற்சித்து கிடைக்கவில்லை. விஜிபி பன்னீர்தாசின் கம்பெனியில் பயிற்சி வகுப்பு கிடைத்தது. 6 மாத பயிற்சிக்கு பிறகு அதேநிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொழில் தொடங்க ஆசை இருந்ததால் 1991ம் ஆண்டு கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை தி.நகர் பாண்டிபஜாரில் தொடங்கினார். அதன்பிறகு சிங்கப்பூருக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்பு 1997ம் ஆண்டு கிடைத்தது. அவர் நம்மிடம் கூறும்போது, “தொழில் தொடங்க யாராவது வழிமுறைகளை சொல்லி தருவார்களா என்று ஏங்கி தவித்தேன். தமிழில் புத்தகங்கள் தேடினேன். கிடைக்க வில்லை. கணக்கு வழக்கு பற்றி அனுபவம் இல்லை. ஆங்கில பேச்சு திறமையும் இல்லை. அப்போதுதான் சிங்கப்பூரிலிருந்து கான்முகமது சித்திக் என்பவர் மூலம் தான் முதன்முதலில் என்னுடைய தொழிலில் கால்பதித்தேன்.
இன்று ஏற்றுமதியாளனாகி இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கியக் காரணம் எனக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்தபோது ஏற்றுமதி தொடர்பான தகவல் அறிய ஒரு தமிழ்ப் புத்தகமும் அப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதுதான். சென்னையில் கணிப்பொறி கற்றுக்கொண்டிருந்த எனக்கு 1997ம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து கான் முகமது சித்திக் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டு அரிசி ஏற்றுமதி செய்யும்படி கேட்டார்.
எங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாம் மருத்துவர்கள், பொறியாளர்கள்தான். அதனால் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது சற்று தயக்கமாக இருந்தது. பலர் எச்சரிக்கை செய்தனர். ஆனால் சித்திக் அவர்கள் உங்களால் முடியும் என்று எனக்கு உற்சாகம் தந்தார். அப்போதுதான் ஏற்றுமதி தொடர்பான தகவல்களை அறிய பல நூல்களைத் தேடினேன். எல்லா நூல்களும் ஆங்கிலத்தில் தான் இருந்தனவே தவிர ஏற்றுமதி தொடர்பான தமிழ்ப் புத்தகம் ஒன்றுகூட இல்லை.
பல பேரிடம் தகவல்கள் கேட்ட பிறகு பொன்னி அரிசியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்தேன். பின்னர் இன்னும் சில அன்றாடம் தேவைப்படும் பொருள்களை ஏற்றுமதி செய்யச் சொல்லி கேட்டனர். அப்போது ஏற்றுமதி தொடர்பான அனுபவங்களைப் பாடமாக நடத்துமாறு FIEO (Federation of Indian Export Organisations) நிறுவனம், சிறு, குறு தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகம் (Ministry of Micro, Small & Medium Enterprises) ஆகிய நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் தொழில் முனைவோருக்கு பயிற்சி அளித்தேன்.
நாணயம் விகடன் சார்பில் நடந்த முகாம்களில் பங்கேற்று பயிற்சி அளித்துள்ளேன். இதுவரை சுமார் 15,000த்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கு பயிற்சி அளித்துள்ளேன். மேலும், 2016 ம் ஆண்டு நாணயம் விகடன் ஆசிரியர் திரு.மணவாளன் மற்றும் ஏ.ஆர்.குமார், சி.சரவணன் ஆகியோர் ஏற்றுமதி தொடர்பாக தொடர் ஒன்று எழுதுமாறு கேட்டனர். 15 வாரங்களுக்கு எழுதச் சொன்னார்கள். ஆனால் வாசகர்கள் தந்த ஊக்கத்தால் நாற்பது வாரங்களுக்கு மேல் தொடர் நீண்டது.
காரணம் ஏற்றுமதித் தொழிலில் என் சொந்த அனுபவங்களை எழுதி அதன் மூலம் ஏற்றுமதி தொழிலின் நுணுக்கங்களைச் சொன்னதால் நிறைய வாசகர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். நட்டம் (Loss), துணிந்து செயலில் இறங்குதல்(Risk), லாபம்(Profit) இவைதான் ஒரு தொழிலில் முக்கியமானவை. அதையும் தாண்டி முக்கியமானது பாதுகாப்பு (Safety). இதன் நுணுக்கங்களை என் சொந்த அனுபவத்தில் இருந்து இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன்.
ஏற்றுமதித் தொழிலில் தனியார், அரசுத் துறைகள் பற்றியும் வாங்குவோரிடம் எப்படிப் பேசுவது, பொருள்களை எப்படி பேக் செய்வது போன்ற நுணுக்கங்கள் பற்றியும் இதில் விளக்கியுள்ளேன். ஆனால் ஏற்றுமதித் தொழிலில் அரசின் கொள்கைகள் அவ்வப்போது மாறும். அதற்கேற்ப தொழில் முனைவோர் தங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஏற்றுமதித் தொடர் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால், பசுமை விகடன் ஆசிரியர் குழுவினர், விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்வது எப்படி என்பது பற்றி தொடர் எழுதக் கேட்டனர். ‘அள்ளித்தரும் அக்கறைச் சீமை’ எனும் தலைப்பில் பசுமை விகடனில் வரும் கட்டுரைகளைப் படித்துவிட்டு பல விவசாயிகள் பயன்அடைந்து வருகின்றனர்.
மேலும் ஏற்றுமதி செய்யும் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் ஒரு ஸ்டார் அந்தஸ்தை 2015ம் ஆண்டு மத்திய அரசு எங்களுக்கு அளித்து, இன்னும் பல ஏற்றுமதியாளர்களை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டது. என் இருபது வருட ஏற்றுமதித் தொழில் அனுபவங்கள் இப்போது நூலாக வெளிவந்துள்ளது. இதனால் பல ஏற்றுமதியாளர்கள் உருவாவார்கள் என்று நம்புகிறேன்.
இந்த 5 சவால்களுக்கும் இன்று நான் 40,000 பேர்களுக்கு மேல் பயிற்சி அளித்து உள்ளேன்.
(தொடரும்…)