தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்கு உண்டான ஒரு முனை மின்சாரம் கூட கிடைப்பது இல்லை. கோடைகாலம் என்பதால் முதியவர்கள், குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். மும்முனை மின்சாரம் என்பது நினைத்துகூட பார்க்க முடியாத நிலை. அதிகாலை நேரத்திலேயே மும்முனை மின்சாரம் தடைசெய்யப்படுவதால் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு நீர் ஏற்ற முடிவது இல்லை. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியதால் விவசாயம் ஆழ்துளை கிணற்றை நம்பியே இருக்கிறது. மின்தடையால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. ஒட்டங்காட்டில் துணை மின்நிலையம் இருக்கின்றது. ஆனால் இயங்குகிறதா என தெரியவில்லை. இங்கு உள்ள உதவி செயற்பொறியாளர் சரியாகத்தான் நிர்வாகம் செய்கிறாரா? இவருக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை இவர் வேலை வாங்குகிறாரா? மின்தடை குறித்து ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்டால் அவமரியாதையான பதில் தான் கிடைக்கிறது.
இங்குள்ள மின்வாரிய அலுவலகம் மட்டும் தனியார் நிர்வாகத்தில் உள்ளதா? இவற்றுக்கெல்லாம் மின்வாரிய உயர்அதிகாரிகள் தான் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.