தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 421 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ்.
திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பூட்டி சீலிடப்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு அலுவலர்கள், பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவத்தினர், காவல் துறையினரின் பணியையும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் விதத்தையும், வேட்பாளர்களுடைய முகவர்களின் அறையையும் பார்வையிட்ட ஆட்சியர் பின்னர் தெரிவித்தது:
மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், காவல் துறையினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது. இந்தக் கண்காணிப்புப் பணியில் துணை ஆட்சியர், வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 149 கண்காணிப்பு கேமராக்களும், கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 160 கண்காணிப்புக் கேமராக்களும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் 112 கண்காணிப்புக் கேராமக்களும் பொருத்தப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.