கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொரானா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட இந்த இ.எஸ்.ஐ மருத்துவமனையில், கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதன் காரணமாக குளிர்சாதன வசதியைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
தற்போது கோடைகாலம் என்பதால் கொரோனா நோயாளிகள் காற்றோட்ட வசதி இல்லாமல் வெக்கையில் சிகிச்சை பெறும் நிலை இருந்து வருகின்றது. இ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் 300 மின்விசிறிகள் சமீபத்தில் பொருத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்த கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், மின்விசிறிகள் தேவைபடுவதை அறிந்து தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின் விசிறிகளை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி டீன் ரவீந்திரன் அவர்களிடம் விசாரித்த போது நகையை அடகு வைத்து வாங்கி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஒரு சில மின்விசிறிகளை மட்டும் அன்பளிப்பாக கொடுங்கள் எனவும், நகையை அடகு வைத்து கொடுக்க வேண்டாம் எனவும் டீன் ரவீந்திரன் அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் தம்பதியினர் பிடிவாதமாக அவற்றை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில் , இது குறித்து இ.எஸ்.ஐ டீன் ரவீந்திரன், மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தொலைபேசி மூலம் தம்பதியிடம் பேசி பார்த்த போதும், அவர்கள் விடாபிடியாக 100 மின் விசிறிகளையும் கொரொனா நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கியே தீருவோம் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தம்பதியினர் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக மின் விசிறிகளை பெற்று, சிகிச்சையில் இருக்கும் கொரொனா நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரும்படி மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி டீன் ரவீந்திரன், தம்பதியிடம் இருந்து நூறு மின்விசிறிகளையும் பெற்றுக்கொண்டார்.
கோடை வெப்பத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரானா நோயாளிகளுக்காக, சொந்த நகைகளை அடகு வைத்து 2.20 லட்சம் ரூபாய்க்கு 100 மின்விசிறிகளை அன்பளிப்பாக வாங்கித் தந்த கோவை ராம்நகர் தம்பதியினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர்கள் தங்களது பெயரையோ, புகைப்படத்தையோ, அடையாளத்தையோ வெளியிட வேண்டாம் என இ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டது குறிப்பிடதக்கது.