நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அனைவரையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரையிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பகல் நேரங்களில் கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற போக்குவரத்துத் துறையும் அறிவித்திருந்தது. அதன்படி, இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலை வெறிச்சோடி கிடக்கிறது. ஆனாலும், வெளியூர் சென்று வருபவர்கள் பலரும் வீட்டுக்குச் செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு எப்படி இருக்கிறது என்று பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது, பேருந்து நிலையம் அருகே காரைக்குடியைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட ஒரு குடும்பத்தினர் திருவாரூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்குச் செல்ல புதுக்கோட்டை வரை வந்த நிலையில், இரவு 10 மணிக்கு மேல் ஆனதால், திரும்பிச் செல்ல பேருந்து ஏதுமில்லை. ஊருக்குச் செல்ல பேருந்து இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இவர்களைப்போல, ஒரு வட மாநில பெண் உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அந்தப் பெண்களிடம் நேரடியாகப் பேசிய மாவட்ட ஆட்சியர் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்பு, அங்கிருந்த நகராட்சி ஆணையரிடம் 3 பெண்கள் உட்பட 20 பேரும் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். உடனே ஆணையரும் 20 பேரும் இலவசமாக விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, காலையில் அனைவரும் பாதுகாப்பாக அவர்களின் ஊர்களுக்குச் சென்றனர்.
இரவு பாதுகாப்பாக இருப்பதற்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி ஆணையருக்கும் அங்கிருந்தவர்கள் நன்றி கூறினர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, “இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலும், இரவு நேரத்தில் பொதுமக்கள் பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பது நல்லது. வெளியே சென்றால் இரவு 10 மணிக்குள் வீட்டுக்குத் திரும்பிவிடும் வகையில் ஏற்பாடு செய்துகொள்வது நல்லது. மேலும் இதுபோல, பயணிகள் பேருந்து நிலையங்களில் தவிக்கக் கூடாது என்பதற்காகப் பேருந்து நிலையங்களில் பேருந்துகள் செல்லும் வழித்தடம் மற்றும் கால அட்டவணைகளை ஆங்காங்கே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.