தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் வேதாந்த குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தாமிர உருக்கு பணிகலோடு; செம்பு கம்பி, கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் ஆகியவையும் உற்பத்தி செய்யப்பட்டன.
இவைகள் உற்பத்தி செய்யப்படும் ஆலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமான கந்தக-டை-ஆக்ஸைடு நச்சு வாயு வெளியானதில், ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் பல கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கக்கூடிய மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மொத்தம் 51 தொழிற்சாலைகள் இயங்கின. இதில் 33 நிறுவனங்கள் எந்த கழிவையும் வெளியேற்றுவதில்லை. மீதமுள்ள 18 தொழிற்சாலைகளில், ஸ்டெர்லைட் ஆலையின்4 யூனிட்டுகள், சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசடையும் வகையில் ஆலைக்குள் கழிவுகளை தேக்கி வைக்கப்பட்டது.
எஞ்சிய 14-ல் 2 ஆலைகள் வெளியேற்றும் கழிவுகள் சூரிய ஒளியில் ஆவியாகிவிடுகின்றன.இப்படி அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை, ஸ்டெர்லைட் மட்டுமே. இதன் காரணமாக, தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால் கடந்த 2013-ம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்கள் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொரோனா நோய் தொற்று தனது இரண்டாவது அலைவரிசையில் மிக வேகமாக பரவி வரும் இந்த வேளையில், தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மருத்துவர்களிடமிருக்கும் மிக முக்கியமான ஒரே ஆயுதமாக ஆக்ஸிஜன் இருக்கிறது. நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அத்துடன் தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடும் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்தச் சூழலில், உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மத்திய அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், மக்கள் கொரோனா தொற்றால், கொத்துக்கொத்தாக இறந்து கொண்டிருக்கையில், தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்சிசன் தட்டுப்பாடு என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது பிச்சை எடுங்கள் அல்லது திருடுங்கள் ஆனால், மக்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என மத்திய அரசை, டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. காரணம் , அந்த அளவுக்கு நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், வேதாந்த நிறுவனம் கொரோனா நோய் தொற்றை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறது. ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய நேரத்திலேயே, சுற்றுசூழல் பிரச்சினையை சரி செய்யாத ஆலை நிறுவனம், இப்போது ஆக்சிஜன் தேவை என்பதால், அதை தயாரிக்க அனுமதிவேண்டும் என்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆலைக்குள் நுழைய முயற்சிக்கிறது.
அதே நேரம், வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமாக, வேறு நிறைய ஆலைகள் இருக்கின்றன. அதில் ஆக்சிஜன் தயாரிக்க முன்வரலாம். மேலும், ஆக்சிஜன் தயாரிக்க ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனம் தயாராக இருக்கிறது. அத்துடன் பல இரும்பாலைகளும் ஆக்சிஜன் தயாரிக்க தாமாக முன்வந்துள்ளன.
இந்த நிலையில், ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி பணியாளர்களுக்கு, பணி ஓய்வு அளித்து அவர்களுக்கு அதற்கான தொகையும் செட்டில்மென்ட் ஆகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்க, உள்ளூர் வாசிகளான இளம் வயதினரை மட்டும் வேதாந்தா நிறுவனத்தின், வேறு ஆலைகளுக்கு புதிய பணியில் அமர்த்தி கொண்டார்கள்.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தாக்கம், அதி தீவிரமாக இருக்கும் இந்த சூழலை பயன்படுத்தி இப்போது இருக்கும் ஆலையின் இடத்தை வைத்து கொண்டு புதியதாக எதோ செய்யப்போவதாக மீண்டும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தூத்துக்குடியிலுள்ள வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து அங்கு ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதேநேரம், ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்கிற மத்திய அரசின் விருப்பம் தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பும் தெரிவித்துள்ள நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த (23.04.2021) ல் மீண்டும் நடைபெற்றது.
இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், கலந்துகொண்ட கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தூத்துக்குடி மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரால் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் முதலிடத்தில் இருப்பதை தொடர்ந்து; கொரோனா வைரஸ் நோய் தொற்று தமிழகத்தில் இரண்டாவது அலையில் வேகமாகப் பரவிவருகிறது.
இந்தச் சூழலில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில் திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததும், ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்கத் தயாராக இருக்கிறோம் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கூறியுள்ளது.
இது விஷயத்தில் மத்திய அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறோம். மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலில், மக்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம்.
ஸ்டெர்லைட் ஆலை மூலம், மக்களுக்கு உதவ வேண்டும் என்பது ஒன்று மட்டுமே எங்களின் தற்போதைய இலக்கு. ஆலையை மீண்டும் திறப்பது குறித்து சட்டரீதியாக வழக்கு சென்றுகொண்டிருக்கிறது. அது தொடர்பான வழக்கு விசாரணை வருகிறது. நிச்சயம் எங்களின் கோரிக்கையை அரசு ஏற்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர். ஒரு வேளை ஸ்டெர்லைட் ஆலையை, அரசே ஏற்று நடத்த அனுமதிப்பீர்களா என்ற கேள்விக்கு, அதெப்படி தனியார் ஆலையை அரசிடம் ஒப்படைக்க முடியும் என்கிற கேள்வியும் முன்வைத்திருக்கிறது நிர்வாகம்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட்டைத் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தத் தயாரா… தமிழக அரசு எடுத்து நடத்தினாலும் கவலையில்லை எனத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, மக்கள் எதிர்ப்பு ஒரு என்றாலும், ஆலையைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். காரணம், ஆலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
தமிழக அரசின் இந்த பதிலால், மிகவும் அதிருப்தி அடைந்த நீதிபதி, மக்கள் இறந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என அரசு சொல்வதா, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி., ஆலையைத் திறக்க முடியாது எனச் சொல்லக் கூடாது என்றார். இந்த நிலையில், தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் எனவும், நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றில், நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தற்போது அரசியல்… ஆகி இருக்கிறது. இந்த விஷயத்தில் என்னதான் நடக்கப் போகிறது; ஆக்ஸிஜனைக் காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா! அப்படி திறந்தால் தமிழக மக்களிடையேயும் குறிப்பாக தூத்துக்குடிக்கு மக்களிடையேயும் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.