மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கையிருப்பு இருக்கும் தடுப்பூசிகள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த மட்டுமே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் இன்று தொடங்காது என அறிவித்தது. அதே நேரம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போதிய அளவு இருப்பு இல்லாததால், முதல் ‘டோஸ்’ போடுவதை நிறுத்தி வைத்துள்ளதாகவும் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
18 வயது நிரம்பியவர்களுக்கான தடுப்பூசி திட்டம் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே திட்டமிட்டப்படி தொடங்குகிறது. இந்த மாநிலங்களிலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே முகாம் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.