சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டார்.
சென்னையில் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், சென்னை மாநகராட்சி ஆணையராக, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2020-ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார்.
கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த ககன்தீப் சிங், மதுரை மாநகராட்சி ஆணையராகவும் இருந்துள்ளார். சுனாமி, தானே புயல், கஜா புயல், நிவர் புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தன் செயல்பாடுகளுக்காக அறியப்பட்டவர் ககன் தீப் சிங் பேடி.
தமிழக முதல்வராக மே 7 அன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், உடனடியாக தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முதல்வருக்கு 4 தனிச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரும் மாற்றப்பட்டுள்ளார்.