மாவட்ட காவல் துறையினர் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..
தஞ்சாவூர்; தஞ்சை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 200-க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறினார். போலீசார் சோதனை தஞ்சை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அதோடு அவர்களின் இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தஞ்சை மற்றும் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜா தலைமையில் தஞ்சை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.இந்த நிலையில் அங்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் வந்து போலீசார் மேற்கொண்ட வாகன சோதனை நடவடிக்கையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இ பதிவு இருக்கிறதா என வாகன ஓட்டுனர்களிடம் பார்த்து வருகிறோம். இந்த நடவடிக்கை நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இ பதிவு இருந்தால் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மருத்துவ அவசரத்தைத் தவிர, இ பதிவு இல்லாமல் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து வருகிறோம். ரூ.2 கோடி அபராதம் வசூல் இதுபோல, மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் 148 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான நடவடிக்கை ஊரடங்கு இருக்கும் வரை தொடரும். எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வருமாறு கேட்டுக் கொள்கிறேன். மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக அபராதமாக இதுவரை ரூ.2 கோடிக்கு மேல் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 நாள்களாக ஏறத்தாழ 250 வழக்குகள் போடப்பட்டுள்ளன. 200-க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை இனிமேல் இன்னும் தீவிரமாக இருக்கும். மாவட்டத்தில் இதுவரை காவல் துறையைச் சேர்ந்த 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் சுமார் 50 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்தது தெரிய வந்தது. பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.