திருவாரூர் to காரைக்குடி ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றிய பொழுது ரயில் பாதையில் குறுக்கிட்ட மாநில மாவட்ட மற்றும் பஞ்சாயத்து கிராமப்புற சாலைகள் ரயில்வே கேட்டில் இருந்து இருபுறமும் சிலமீட்டர் தூரத்துக்கு ரயில்வே துறையால் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த இணைப்பு சாலைகள் சில மாதங்கள் கூட தாக்கு பிடிக்காமல் பள்ளம் படுகுழி என்ற நிலையையும் தாண்டி படுபாதாளங்களாக மாறிவிட்டது.
குறிப்பாக பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி பகுதிகளில் படு மோசமான நிலையில் உள்ளது. நவக்கொல்லைக்காடு இணைப்பு சாலை பத்துக்காடு இணைப்பு சாலை போன்ற சாலைகளில் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் கூட செல்ல முடியாத நிலை இருசக்கர வாகனங்களில் மட்டும் ஒரு ஓரமாக ஒற்றையடி பாதையில் சென்று வருகின்றன. மேலும் கொன்றைக்காடு, காலகம் ரயில்வேகேட் வழியாக கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
சிறிய விபத்துகள் ஏற்படுகின்றன. பெரிய அளவில் ஏதேனும் விபத்து ஏற்படும் முன்சாலையை சீரமைக்க ரயில்வே மற்றும் மாநில அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பொதுவாக ரயில்வே துறையின் கட்டுமான பணிகள் மிகவும் உறுதியானவை நம்பகதன்மை உடையது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடம் உள்ளது.
ஆனால் பல கோடி செலவு செய்து கட்டமைக்கப்பட்ட ஒட்டங்காடு ரயில்நிலையம் உட்பட பல கட்டமைப்புகள் சிதைந்து கிடக்கின்றன நம் விசாரணையில் இந்த இணைப்பு சாலைகள் ஆந்திராவை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் சாலைப்பணியை செய்யாமல் வெளியேறியதால் ரயில்வே திருச்சி கோட்ட அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சில தகுதியற்ற நபர்களை கொண்டு இந்த பணியை செய்து முடித்ததாக தெரிகிறது. இந்த இணைப்பு சாலைகள் அமைக்கப்படும் பொழுது பணியை கண்காணிக்க வேண்டிய ரயில்வே மற்றும் மாநில, மாவட்ட, நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அவர்கள் பணியை சரியாக செய்து இருந்தால் இந்நிலை ஏற்பட்டு இருக்காது. இதுகுறித்து ரயில்வே பொதுப்பணி பொறியாளர் ஒருவரிடம் பேசிய பொழுது இந்த சாலை பராமரிப்பு பணிக்காக திட்ட மதிப்பீடு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லை. எங்களிடம் ஆட்களும் பற்றாக்குறை எனவே பேராவூரணி உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை அதிகாரியிடம் கோரி உள்ளோம். விரைவில் சரி செய்யப்படும் என கூறி முடித்துக்கொண்டார்.
ஓடாத ரயிலுக்காக பல ஆயிரம் கோடி செலவு செய்து ரயில்பாதை அமைத்த ரயில்வே நிர்வாகம் உள்ளூர் போக்குவரத்தை முடக்கலாமா? மாண்புமிகு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருக்கு நீதியின் நுண்ணறிவு இதழ் சார்பில் கவனத்திற்கு கொண்டு செல்வோம்…