சென்னை திருவல்லிக்கேணியில் செயல்படும் கஸ்தூரிபாய் காந்தி சமூக நல மகப்பேறு மருத்துவமனையில் (Gosha Hospital) கடந்த 26.05.2021 அன்று இரவு 8 மணியளவில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் என கூச்சல் எழுந்துள்ளது. அப்போது அருகில் இருந்த அறுவை அரங்கு ஆண் செவிலியர் ஜெயக்குமார் என்பவர் அங்கு சென்று பார்த்த பொழுது குழந்தைகள் மருத்துவ அதிகாரி (NICU) அறையில் தீ பற்றி எரிந்தது தெரிந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு அவர்களுக்காக காத்திராமல் தன்னுயிரையும் பொருட்படுத்தாது மருத்துவமனையில் இருந்த அதிவேக தண்ணீர் பீச்சியடிக்கும் கருவியை இயக்கி உள்ளார். அக்கருவி பழுதடைந்த நிலையில் இருக்கவே அடுத்த முயற்சியாக மருத்துவமனையில் இருந்து சுமார் 12 தீயணைப்பு உருளைகளை (Fire Extinguisherஷீ) தனியாளாக பயன்படுத்தி தீயை முற்றிலும் அணைத்துள்ளார்.
மருத்துவ அதிகாரியின் அறையில் இருந்த AC M/C மூலம் தீ பரவியதை உணர்ந்துள்ளார். சுமார் 20 நிமிடம் போராடி 46 பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை மீட்டு உள்ளார். இதில் அவர் கையாண்ட தீயணைப்பு உருளையில் இருந்து வெளியேறிய கார்பன் டை ஆக்ஸைடு (CO2) அதிகப்படியாக இவரும் சுவாதித்ததால் சுயநினைவு இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார். செய்தி அறிந்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனை சென்று விசாரித்தபொழுது அங்கிருந்த மருத்துவ கல்வி இயக்குனர் (DME) திரு. நாராயண பாபு அவர்கள் செவிலியர் ஜெயக்குமாரின் தன்னலமற்ற செயலை மறைத்து வேறுவிதமாக விளக்கம் அளித்துள்ளார். சம்பவம் நடந்த பொழுது அங்கு இருந்த மற்ற பணியாளர்களையும் எதுவும் சொல்லக் கூடாது என மிரட்டி உள்ளார். மேலும் கொரோனா தடை காலம் என்பதால் எப்பொழுதாவது தான் குடும்பத்தினரை நேரில் பார்க்க வேண்டிய நிலை. இதைப் பயன்படுத்தி ஜெயக்குமார் சிகிச்சையில் இருந்ததை அவர் மனைவியிடம் கூட தெரிவிக்காமல் மறைத்து உள்ளனர்.
மருத்துவ பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக அரசால் கொண்டாடப்படும் நிலையில் ஜெயக்குமாரின் போற்றப்பட வேண்டிய செயல் மருத்துவ கல்வி இயக்குனரால் மறைக்கப்பட்டது ஏன்? தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசு நிர்வாகம் மற்றும் பொது மக்களால் ஜெயக்குமார் பாராட்டப்பட்டால் மருத்துவ கல்வி இயக்குனருக்கு என்ன சங்கடம்? இதில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? ஜெயக்குமார் போன்ற மருத்துவ பணியாளர்கள் தான் நோயாளிகளிடம் நேரடி தொடர்பில் உள்ளவர்கள். பாராட்டையோ, பணத்தையோ எதிர்பார்த்து ஜெயக்குமார் இந்த தீர செயலை செய்ய வில்லை. அவர் நோக்கம் ஏதுமறியா பச்சிளம் குழந்தைகளின் உயிர் காக்கப்பட வேண்டும் என்பதே. ஆனாலும் அவருக்கு உரிய கவுரவம் அரசால் கிடைக்கப் பெற வேண்டும் உண்மையை மூடி மறைத்த மருத்துவ கல்வி இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உயிர் காக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது நிறைவேற்றுவாரா திரு. உதயநிதி ஸ்டாலின்?