தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் 2016 முதல் 2018 ம் ஆண்டுகளில் பாரத பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் பட்டியல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்கப்பட்டது. அதன்படி உள்ளாட்சி துறையால் மேற்கண்ட காலகட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக 10 பயனாளிகளின் பட்டியல் நமக்கு அளித்துள்ளார்கள். இதுகுறித்து நமது இதழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம்.
பட்டியலிலுள்ள பயனாளிகளுக்கு உண்மையில் வீடுகள் கட்டித் தரப்படவில்லை அவர்கள் குடியிருந்த வீடுகளும் தற்போது பழுதடைந்து குடியிருக்க வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
கட்டப்படாத வீடுகளை கட்டி முடிக்கபட்டதாக துணிச்சலுடன் கணக்கு காட்டி உள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாளிகளா? இதில் உண்மையில் பயன் அடைந்த அதிகாரிகள் யார்? இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட ஊராட்சிகள் திட்ட இயக்குனர் தகுந்த ஆதாரத்துடன் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை திட்ட இயக்குனர் நடவடிக்கை எடுக்க தங்குவதன் மர்மமென்ன?
இதே காலகட்டத்தில் கழிவறைகள் கட்டியதாக தரப்பட்ட தகவலின் படியும் நூற்றுக்கணக்கான கழிவறைகள் கட்டப்படாமல் மக்களின் பணம் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் பட்டியல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் தான் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய வேண்டிய மக்கள் பயன்அடையவில்லை. மாறாக கீழ்மட்ட ஊழியர் முதல் ஒன்றிய அதிகாரிகள் வரை பயனடைந்து உள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. மக்கள் பணியை விட இவர்களுக்கு வேறு ஏதேனும் பணிகள் உள்ளனவா? அல்லது நடந்த ஊழலை அனைவரும் சேர்ந்து மறைக்கப்பார்க்கிறார்களா?
ஆட்சி மாறிவிட்டது. அதிகாரிகளின் மனநிலையும் கண்டிப்பாக மாறவேண்டும்! பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். பதில் சொல்வாரா தஞ்சை மாவட்ட திட்ட இயக்குனர்? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?