வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அன்பரசு, என்பவர் ONGC நிறுவனத்தில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். 25.05.2021 அன்று அன்பரசுவின் செல்போனுக்கு Pan Card Update செய்ய வேண்டும் என்று வங்கியில் இருந்து அனுப்புவது போல குறுஞ்செய்தி வந்துள்ளது. சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணில் அழைத்து பேசிய நபர் தான் SBI வங்கியின் துணை மேலாளர் பேசுவதாகவும் தங்களின் Pan Card Update செய்ய வேண்டும் என்றும் அதற்காக தங்களின் செல்போன் எண்ணிற்கு வந்துள்ள குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும், தற்போது அனுப்பிய OTP எண்ணை தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். இதனை உண்மையென நம்பிய அன்பரசு OTP எண்ணை அனுப்பியி சில நிமிடங்களில் அன்பரசுவின் வங்கி கணக்கிலிருந்து சிறிது சிறிதாக என ரூ.53,25,000/- பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து, அன்பரசு 26.05.2021 அன்று V1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்து உடனே, அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு.ராஜாசிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன் (கா.46781) மற்றும் ராம்சங்கர் (கா.46193) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் அன்பரசுவின் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தில் விசாரணை செய்து, அன்பரசுவின் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் ரூ.53,25,000/- அபகரிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. உடனே சைபர் குழுவினர் பரிந்துரையின்பேரில் வங்கி நிர்வாகம் அன்பரசுவின் Net banking அக்கவுண்டை நீக்கம் செய்து, பணபரிவர்த்தனை மூலம் மாற்றம் செய்யப்பட இருந்த ரூ.53 லட்சத்தை திரும்ப அவரது சேமிப்பு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. மேலும், ஆன்லைன் பரிவர்த்தனையில் மோசடியான பணம் ரூ.25,000/- பணத்தையும் மீட்டு தருவதாக வங்கி நிர்வாகம் உறுதியளித்தது.
மேலும், மேற்படி சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீள பெற்றுத் தந்த அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 27.05.2021 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.