சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை, அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட K4 அண்ணாநகர் மற்றும் V5 திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்ட்ட முக்கியமான சாலை சந்திப்புகளான அண்ணாநகர் ரவுண்டனா, V-4 அண்ணாநகர் காவல் நிலைய ரவுண்டனா, சாந்தி காலனி சந்திப்பு, 100 அடி சாலை மற்றும் எஸ்டேட் சாலை சந்திப்பு, மேற்கு டிப்போ மற்றும் 18வது சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் 2019ம் ஆண்டு, ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்திய லிமிடெட் நிறுவனத்துடன் ஓருங்கிணைந்து 61 நவீன கேமிராக்கள் நிறுவப்பட்டு, மேற்படி 5 சிக்னல்களிலும் போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து, கட்டுப்பாட்டறையில் கண்காணித்து, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்த செலான்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் National Informatics Centre (NIC) உடன் ஒருங்கிணைந்து, இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்கள் கேமிராக்களில் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் உடனுக்குடன் செலான்கள் அனுப்பும் முறைக்கான பணி செயல்படுத்தப்பட்டு, முடிவுற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 01.7.2021 அன்று மதியம், அண்ணாநகர் ரவுண்டனா அருகிலுள்ள போக்குவரத்து விதிமீறல் கண்காணிக்கும் அண்ணாநகர் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறையை திறந்து வைத்து, விதிமீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு தானியங்கி செலான் அனுப்பும் புதிய நடைமுறையை துவக்கி வைத்தார்.
அதன்பேரில் 01.7.2021 அன்று முதல் மேற்படி 5 சிக்னல்களிலும், Signal violation, Stop line cross, Wrong way, Over speed உட்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, தானியங்கி கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் மேற்படி வாகனங்களின் உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு தகவல் அளித்து, செலான் அனுப்பும் முறை நடைமுறைபடுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் திரு.பிரதிப்குமார், இ.கா.ப,. இணை ஆணையாளர்கள் திருமதி.ஆர்.லலிதா லஷ்மி, இ.கா.ப., (போக்குவரத்து/வடக்கு), திருமதி எஸ்.ராஜேஸ்வரி, இ.கா.ப., (மேற்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் திருமதி.எஸ்.தீபா கனிக்கர், இ.கா.ப., (அண்ணாநகர் மாவட்டம்), திரு எம்.எம்.அசோக் குமார் (போக்குவரத்து/மேற்கு), ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவன அறங்காவலர்கள் திரு.ஸ்டீபன் சுதாகர், கணேஷ் மணி, கார்ப்பரேட் தலைமை திரு.விஜயபாஸ்கர், National Informatics Centre (NIC) நிர்வாக அதிகாரிகள் திரு.சீனிவாச ராகவன், திரு. ராமதாஸ், திரு.கதிர்செல்வன், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் திரு.ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.