தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகாயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் இந்திரா. இவருக்கு, நிலுவைத் தொகை ரூ.25 ஆயிரம் வந்துள்ளது. அந்த தொகையை வழங்க ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி, இந்திராவிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனை கொடுக்க விரும்பாத இந்திரா தி.மலை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். அவர்களது அறிவுரையின் பேரில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில், இந்திராவிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை ஸ்ரீதேவி பெற்றுக்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் அருள் பிரசாத், மைதிலி மற்றும் அன்பழகன் தலைமையிலான காவல்துறையினர், லஞ்சம் வாங்கிய ஸ்ரீதேவியை கையும் களவுமாக பிடித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஸ்ரீதேவியை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட ரூ.5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.