தமிழகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாநகரில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, பூக்கார தெருவில் ஆய்வு செய்த ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கடந்த 5 நாட்களாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-க்கும் கீழ் குறையவில்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இயலாது.எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் வீட்டு வாயிலை அடைத்து தனிமைப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் துண்டறிக்கையில் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 150 வீடுகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஒரு தெருவில் மூன்று வீடுகளுக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அத்தெரு முழுமையாக அடைக்கப்படும். இது போன்ற நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஆட்சியர்.
அப்போது கோட்டாட்சியர் எம். வேலுமணி, மாநகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (பொறுப்பு) நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.