பொதுதகவல் அலுவலர்களை கண்காணித்து, நான்கு வழக்குகளில் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க, வருவாய் நிர்வாகத்துறை இணை செயலரை பொறுப்பு அலுவலராக நியமித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பி.கல்யாண சுந்தரம். இவர் வருவாய், நில நிர்வாகம், பதிவுத்துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை போன்ற வற்றில் சில தகவல்கள் கேட்டு மனு செய்து இருந்தார். இந்த மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் பொது தகவல் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, துறைகளின் மேல்முறையீட்டு அதிகாரிகளிடம் அவர் முறையிட்டார். அங்கும் தகவல் கிடைக்காத நிலையில், கல்யாண சுந்தரம் மாநில தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக, மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் பிறப்பித்த உத்தரவு:
நான்கு வழக்குகளிலும் பொது தகவல் அலுவலர்கள், தங்கள் பொறுப்பை நிறைவேற்றாதது உறுதி ஆகிறது. மேலும், விசாரணையின் போது, மனுதாரர் கோரிய தகவல்களை உடனடியாக வழங்கவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நான்கு துறைகளின் பொது தகவல் அலுவலர்களும், மனுதாரருக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை செயலர் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். மனுதாரருக்கு உரிய தகவல்களை 21 நாட்களுக்குள் வழங்கி, அதற்கான ஒப்புகை ஆதாரத்தை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், பொது தகவல் அலுவலர்களுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.