தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகில் உள்ள மகாராஜசமுத்திரம் காட்டாற்றை கடந்து செல்ல பாலம் அமைக்கவேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாகோட்டை பகுதியில் இப்பகுதியிலேயே பிரசித்தி பெற்ற சிவாலயம் ஒன்று உள்ளது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆள்நடமாட்டம் இல்லாத வெட்டவெளியில் லிங்கம் ஒன்று பூமிக்கு வெளியில் காட்சி தெரிந்ததையடுத்து இது அன்று முதல் கண்டெடுத்த லிங்கேஸ்வரர் என்று பெயரிடப்பட்டு இந்த சிவாலயத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்களும் காட்டாற்று தண்ணீரை கடந்து செல்லவேண்டியநிலை உள்ளது. புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் பெரும்பாலும் மழைபெய்யும் என்பதால் காட்டாற்றில் தண்ணீர் அதிகம் செல்லும். இதில் நீச்சல் தெரிந்தவர்கள் கழுத்தளவில் செல்லும் காட்டாற்று நீரை கடந்துசெல்லும் நிலை உள்ளது. இதுவே தொன்றுதொட்ட அவலமாக உள்ளது.
இக்கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷங்கள் நடைபெறுவதால் பக்தர்கள் காற்றாற்றை கடக்க முடியாதவர்கள் பட்டுக்கோட்டையிலிருந்து கோட்டாக்குடி வழியாக வந்து 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே இக்கோயிலுக்கு பக்தர்கள் வரும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் இந்தப் பகுதியில் 2010ஆம் ஆண்டு மணல் பாலம் அமைத்து கோவிலில் வழிபட்டு வந்த நிலையில் 2011ஆம் ஆண்டு வெள்ளத்தில் இந்தப் பாலம் அடித்து செல்லப்பட்டது. அதிராம்பட்டினம் சுற்றி உள்ள பக்தர்கள் இந்த காட்டாற்றின் குறுக்கே தண்ணீர் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் திரும்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல அதிராம்பட்டினத்தை ஒட்டியுள்ள பகுதிகளான மாளியக்காடு, சேன்டாகோட்டை, தொக்காலிக்காடு, அக்கரைவயல் உள்ளிட்ட கிரமங்களைச்சேர்ந்த விவசாயிகளுக்குச் சொந்தமான விவசாயநிலங்கள் கிட்டத்தட்ட 2000 ஏக்கர் காட்டாற்றுக்கு அப்பால் உள்ளது. இதனால் சாகுபடி செய்யும் காலங்களில் சாகுபடிக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களையும் கொண்டு செல்லும் போது காட்டாற்று வெள்ளத்தைக்கடந்து செல்லவேண்டும்.
இந்நிலையில் பல விதத்திலும் இந்த காட்டாற்றில் பாலம் அமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பக்தர்கள்,பொதுமக்கள் பலமுறை அரசிடம் கோரிக்கைவைத்தும் இது நாள்வரை பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் வேதனைதெரிவிக்கின்றனர். புதிய அரசாவது பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பார்கின்றனர் பக்தர்கள்.
– Dr. வேத குஞ்சருளன்