தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி நடுவிக்குறிச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆரம்ப காலத்தில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நடந்து வந்த இப்பள்ளி, நாளடைவில் மாணவர் சேர்க்கை குறைந்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போது போதிய ஆசிரியர் இல்லாமை, சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் என பல்வேறு சீர்கேடுகளால் பொலிவிழந்தும், மாணவ மாணவியரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையிலும் இருக்கும் இப்பள்ளியை சீர்படுத்தி மீண்டும் பழைய நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஊர்மக்களும், முன்னாள் மாணவர்களும் கடந்த அதிமுக அரசு அதிகாரிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இவர்களது கூக்குரல், செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்ததுதான் மிச்சம். ஒருவரும் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
நமது நுண்ணறிவு 2020 ஆகஸ்ட் மாத இதழில் “மூடு விழாவை நோக்கி அரசுப்பள்ளி? நடவடிக்கை எடுப்பாரா தஞ்சை மாவட்ட ஆட்சியர்” எனும் தலைப்பில் மேற்கண்ட அரசுப்பள்ளியின் அவலத்தை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அந்த இதழை, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் கொடுத்து நடவடிக்கை வேண்டி கோரிக்கை வைத்தோம். அந்த காலகட்டத்தில் பொறுப்பில் இருந்த ஆதிதிராவிடர் திட்ட அலுவலர் இளங்கோவனிடம் தெரிவித்தோம். நடவடிக்கை எடுப்பதாக சொன்ன அவரும் இடம் மாறுதல் ஆகிவிட்டார். அன்றிலிருந்து அந்த அறை பூட்டியே கிடக்கிறது.
யாருமே கண்டுகொள்ளாத நிலையில், புது வெளிச்சமாக சமீபத்தில் பல்வேறு தினசரி பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இந்தப் பள்ளியின் அவலத்தை குறித்து செய்தி வெளியாகி வருகின்றன. இவை துறை அமைச்சரின் பார்வைக்கு வரவில்லை போலும். மக்களின் குறைகளை அறிந்ததும் உடனடியாக தீர்த்து வைக்கும், நமது முதல்வரின் ஆட்சியில் தங்கள் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்கிற நம்பிக்கையில் மாணவ, மாணவியரும், பெற்றோர்களும், இப்பள்ளியால் பயன்பெறும் 15 கிராம மக்களும், முன்னாள் மாணவர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
திமுக ஆட்சி அமைந்ததும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ழி.அசோக்குமார் இப்பள்ளியின் வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இவருக்கு நன்றி தெரிவிக்கும் ஊர்மக்கள், இதோடு கூட பள்ளியின் சிதிலமடைந்த கட்டிடங்களை இடித்து தள்ளிவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டித்தரவும், மாணவர் சேர்க்கை உயர்த்தி 15 கிராம மக்களுக்கு பயன்தரவும் துறை அமைச்சரிடம் பேசி ஆவண செய்வார் என எம்.எல்.ஏ அசோக்குமாரிடம் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி இல்லாத ஊரில் குடியிருப்பது பாழ்.