தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார ஆலையை நிரந்தரமாக அகற்றிட, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, செப்.04 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் நாகூர் மீரான், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சுந்தர்ராஜன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த தோழர் கிருஷ்ணமூர்த்தி, சமுக ஆர்வலர் குணசீலன் , பச்சைத் தமிழகம் கட்சி துணைத் தலைவர் தோழர் அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், பஷீர் சுல்தான் மற்றும் சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர்கள் இஸ்மாயில், ஹுசைன், ரஷீத், சீனி முகமது, சலீம், பிலால் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்கள், ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு துயர சம்பவம் அரங்கேற்றப்பட்ட பின்னர் தான் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு தந்திரமான வழிகளிலும், நீதிமன்ற முறையீடு மூலமாகவும் ஆலையை மீண்டும் திறப்பதற்குண்டான நடவடிக்கைகளில் ஆலை நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
ஆகவே, தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அமைவதை தடுக்கும் வகையிலும், திறப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் கிடைத்திராத வகையிலும், இத்தகைய நாசகார ஆலை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அமைந்து விடாத வகையிலும், தமிழக சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரிலேயே கொள்கை தீர்மானம் நிறைவேற்றி சிறப்புச் சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த கவன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.