புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த ஆர்.மீனா (70), புதுக்குளம் பூங்கா வாசலில் தரைக்கடை மூலம் தின்பண்டங்களை விற்பனை செய்து வந்தார். மழை, வெயில் சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு வந்த மூதாட்டியைப் பல்வேறு துறை அலுவலர்களும் கடந்து சென்று வந்தனர். இந்நிலையில், இப்பூங்காவுக்கு அவ்வப்போது நடைப் பயிற்சிக்கு வந்து செல்லும் ஆட்சியர் கவிதா ராமு, மூதாட்டியைக் கவனித்துள்ளார்.
உடனடியாகப் பொருட்களை மழையில் நனையாமல் பாதுகாத்து, விற்பனை செய்யும் வகையில் மூதாட்டிக்குத் தகரப் பெட்டி ஒன்றை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார். மேலும், 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய கார்டையும் வழங்கினார்.
ஆட்சியரின் இத்தகைய நடவடிக்கையால் மூதாட்டி மீனா நெகிழ்ச்சி அடைந்தார். அப்போது, நகராட்சி ஆணையர் எஸ்.நாகராஜன் உடனிருந்தார்.