நமது இந்திய நாட்டில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டு வீடு இல்லா ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. இதற்கான தொகை 2 லட்சத்து 70 ஆயிரம் வரை கொடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் 4 தவணைகளாக பணமாகவும், பாக்கிக்கு சிமெண்ட், கம்பி, கதவு, ஜன்னல் என்று பொருள்களாக கொடுக்கப்படுகின்றது.
ஒரு வீட்டுக்கு 8000ம் செங்கல் வரை தேவைப்படுகின்றது. 1 செங்கல் விலை 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை ஆகின்றது. கொத்தனார், சித்தாள் கூலி 50 ஆயிரம். சென்ட்ரிங் அடிக்க 30 ஆயிரம், மணல் அல்லது எம் சாண்ட் வாகன வாடகை சிமெண்ட், கம்பி, 11/2 ஜல்லி, முக்கால் ஜல்லி என எல்லாவற்றையும் கணக்கீடு செய்தால் 31/2 லட்சம் முதல் 4 லட்சம் வரை வருகின்றது.
இதிலும் அரசு கொடுக்கும் இரும்பு, சன்னல், கதவுகளை தவிர்த்து மரம் சம்பந்தப்பட்ட கதவு, ஜன்னல் போட்டால் இன்னும் அதிகமாக பணம் செலவாகும். இந்த நிலையில் 2 லட்சத்து 40 ஆயிரத்தில் ஒரு ஏழை எப்படி வீடு கட்ட முடியும். ஒப்பந்தகாரர்கள் ஹாலோ பிளாக் வைத்து கட்டி ரூப் மட்டும் போட்டு கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, கட்ட தொடங்கி அந்த வீடுகளுக்கு பில் வருவதில் பல சிக்கல் மற்றும் தாமதங்கள் நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் சுமார் 20 வீடுகள் வரை குழிவெட்டி பில்லர் கம்பி நிறுத்தியதோடு ஆறு மாதமாக அப்படியே கிடக்கின்றது. நாம் விசாரித்தபோது புனல்வாசலைச் சேர்ந்த யோவான் என்பவர் இந்த வீட்டு வேலைகளை செய்ததாகவும், ஒரு வீட்டுக்கு குறிப்பிட்ட சிமெண்ட் மூட்டைகளும், முதல் தவணை பில்லும் எடுத்து விட்டதாகவும் கூறுகின்றனர். பலமுறை கேட்டும் வீட்டு வேலையை தொடங்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எந்த பதிலும் இல்லை. ஒரு சில பயனாளிகள் ஓவர்ஸியரிடம் முறையிட்டு வேதனைப்படுவதாகவும் தகவல் வருகின்றது.
தேர்தலில் 25 லட்சத்திற்கு மேல் செலவு செய்யும் ஊராட்சி மன்ற தலைவர் 10 ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க மனம் இல்லை. லாபம் கிடைக்கும் வேலைகளை மட்டும் பார்க்கின்றார்கள். பயனாளிகள் இதைப் பற்றி கேட்டால், தலைவர் எந்த பதிலும் சொல்வதில்லை. எனக்கு ஒன்றும் தெரியாது என்று நழுவிக் கொள்கின்றார்.எனவே மத்திய மாநில அரசுகள் ஏழைகளுக்கு வீடு கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதில் உள்ள சிரமங்களை ஆய்வு செய்து ஏழைகள் பயன்பெறும் வகையில் வீட்டை கட்டி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே ஏழை மக்களின் எதிர்பார்ப்பு.