சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி வெளியிட்ட அறிக்கை வருமாறு:
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைக்க ப்பட்ட இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, சுயதொழில் வங்கி கடன் உதவி, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, பாதுகாவலர் சான்று, இலவச பேருந்து பயண சலுகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரியம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும் வகையிலும் சில திட்டங்கள் நேரடியாக இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வகையிலும் உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகச் சட்டங்கள், சட்டவிதிகள், கல்வி வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்துதல், அரசுப் பணியாளர் நலனுக்கான அரசானை வழிகாட்டுதல்கள் ஆகியவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்புப் பள்ளிகள், இல்லங்கள், சிறப்புக் கல்வி நிறுவனங்கள் விவரங்களும் இணையத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளம் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பார்வையற்றவர்கள் பேசும் கணினி மற்றும் செல்பேசியின் மூலம் அறியும் வகையில் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
https://chennai.nic.in/-Departments என்ற பகுதியில் ஆங்கிலத்திலும் https://chennai.nic.in/ta/ துறைகள் என்ற பகுதியில் தமிழிலும் சென்று தெரிந்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.