திருமண விழாக்கள் தவிர, இதர விழாக்களை திருமண மண்டபங்கள், விழா அரங்கங்களில் நடத்த அனுமதி இல்லை என பேராவூரணி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், திருமண மண்டப உரிமையாளர்கள், விழாஅரங்க உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. துணை வட்டாட்சியர்கள் கவிதா, சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் கிள்ளிவளவன், சுமித்ரா, கமலநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வட்டாட்சியர் சுகுமார் பேசியதாவது, தற்போது கொரோனா வழிகாட்டி விதிமுறைகள் அமலில் இருப்பதால், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி, திருமண மண்டபங்கள், விழா அரங்கங்களில் திருமண விழாக்கள் மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதில், அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி கைகழுவும் வசதி, சானிடைசர் வசதி செய்திருப்பதுடன், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்.
50 நபர்கள் மட்டுமே திருமண விழாக்களில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. அது தவிர, இதர விழாக்கள் நடத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி நடப்பதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட திருமண மண்டபம், விழா அரங்க நிர்வாகிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். அதோடு மண்டபங்கள் சீல் வைக்கப்படும். எனவே, கொரோனா வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி நடக்குமாறு அனைத்து திருமண மண்டப, விழா அரங்க உரிமையாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் மண்டப, விழா அரங்க உரிமையாளர்கள் நீலகண்டன், பாலமுருகன், கோபாலகிருஷ்ணன், சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
– Dr. வேத குஞ்சருளன்