தேனி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயல்பாடுகள் சரியில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியதால் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி தேனி மாவட்டம் பூமலைக்குண்டுவில் ஊராட்சி தலைவர் பிரியா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரி, செயலாளர் செந்தில் ஆண்டவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊராட்சியின் வரவு-செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஊராட்சியின் செயல்பாடுகள் சரியில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் பூமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள கோவில்களின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று பலமுறை ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் வலியுறுத்தியும், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அப்போது பொதுமக்கள் சிலருக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை கிராம நிர்வாக அலுவலர் சமாதானம் செய்தார்.
இதற்கிடையே ஊராட்சி தலைவர் பிரியா, துணைத்தலைவர் மகேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வதி, ஜெயா, மஞ்சுளா, விஜயா உள்பட 5 பேரும் தங்களது பதவியை கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள், கலெக்டருக்கு கடிதம் அனுப்பினர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரியா கூறுகையில், கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது தான் ஊராட்சிக்கு நிதி வந்துள்ளது. நிதி பற்றாக்குறைவால் பணிகள் உரிய காலத்தில் நடைபெறவில்லை. இதை அறியாமல் பொதுமக்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். எனவே எங்களது பதவியை ராஜினாமா செய்து, கலெக்டரிடம் முறையாக கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.
பூமலைக்குண்டு பொதுமக்களிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பூமலைக்குண்டு ஊராட்சிக்கு தேர்தலும் தேவையில்லை, அதிகாரிகளும் தேவையில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.