பத்திரிகைத் துறையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிறது..
அதற்கு காரணம் இவை நாட்டு மக்களின் எண்ணங்களை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, உணர்வுகளை, வலிகளை, நடுநிலையோடு பிரதிபலிக்கும் கண்ணாடியாக திகழ்வதால்தான் பத்திரிகைத் துறையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிறது..
அதோடு, அரசியல், விளையாட்டு, தொழில், விவசாயம், கல்வி, அரசு திட்டங்கள் என்று பல்துறையின் செய்திகளை, கருத்துகளை, தகவல்களை நாட்டுக்கு அளிக்கும் மிகச் சிறந்த சாதனமாக திகழ்கிறது.
மக்களின் கல்வியறிவு நன்கு வளர்ச்சி பெற்றதன் அடையாளமாகவே பத்திரிகைகளின் வளர்ச்சி வானளவு பிறப்பெடுத்தன.
உலகின் எந்தத் திசையில் என்ன நிகழ்கிறது என்பதை மக்கள் அறியவும்,
அரசுகள் செய்யும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் இந்தப் பத்திரிகைகள் உதவுகின்றன.
North East West South
என்பதன் சுருக்கமே
NEWS என்றானது..
நான்கு திசைகளின் முதல் எழுத்துகளே வரி வடிவங்களே ஆங்கிலத்தில் NEWS என்று அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில்
உலகின் நான்கு திசைகளிலும் நல்லது கெட்டது நடப்பவற்றைக் கொண்டு வந்து தரும் பத்திரிகைகளே செய்தித்தாள் என்று அழைக்கப்படுகிறது.
பத்திரிகை தோன்றிய வரலாறு
நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை செய்தித்தாள்கள் (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் தினசரிகள் (Dailies) என்றும் அழைப்பதுண்டு.
கி.பி.1476 இல் இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார். கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முனைந்த மேலை நாட்டினர் இந்தியாவில் அதை கி.பி.1550 -இல் அறிமுகம் செய்துவைத்தனர். அதன்பின்,1622 ஆம் ஆண்டில் முதல் செய்தி இதழாக The Weekly News வெளியிடப்பட்டது.பின்,London Gazetteer என்ற இதழ் முறையாக 1666 -இல் வெளிவந்தது.
இவ்வாறு உலகம் முழுவதும் இதழியல் வளர்ச்சி அடையத் தொடங்கியது.இந்தியாவில் 1780-இல் Bengal Gazetteer,1789-இல் Indian Gazetteer போன்ற இதழ்கள் வெளியிடப் பெற்றன.
தமிழ்நாட்டில் 1831-இல் முதல் தமிழ் இதழாக ‘கிறித்தவ சமயம்’வெளிவந்தது.பிறகு,1853-ஆம் ஆண்டில் தின வர்த்தமானி என்னும் தமிழ் வார இதழ் வெளியானது.கி.பி.1870-க்குப் பின்னர், சென்னை மாகாணத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு நாள்,வார,மாத இதழ்கள் வெளிவர தொடங்கியது.
தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட இதழ்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு
1882 – பிரபஞ்சமித்திரன் மற்றும் ஞானபானு – வ.உ.சிதம்பரம் & சுப்பிரமணிய சிவா
1906 – சர்வஜனமித்திரன் – வேதமூர்த்தி
1907 – இந்தியா – சுப்பிரமணிய பாரதியார்
1917 – திராவிடன், தேசபக்தன்,நவசக்தி- திரு.வி.கல்யாணசுந்தரனார்
1917 – பாலபாரதி- வ.வே.சுப்பிரமணியம்.
1920 – தமிழ்நாடு – வரதராஜுலு
1930 – ஆனந்த விகடன்-எஸ்.எஸ்.வாசன்
1933 – மணிக்கொடி -பி.எஸ்.ராமையா
1934- தினமணி- சொக்கலிங்கம்
1936 – விடுதலை- பெரியார் ஈ.வே.ரா.
1937- ஜனசக்தி-ப.ஜீவானந்தம்
1940 – கல்கி- ரா.கிருஷ்ணமூர்த்தி
1942- தினத்தந்தி- சி.பா.ஆதித்தனார்.
1951 – தினமலர் – டி. வி. இராமசுப்பையா
1963 – தீக்கதிர்
சுதேசமித்திரனும் மகாகவி பாரதியாரும்
சுதேசமித்திரன் (Swadesamitran) தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும். 1882 – ஆம் ஆண்டு இதழாளர் ஜி. சுப்பிரமணிய அவர்களால் தொடங்கப்பட்டது.
மதராசு மாகாணம் என அழைக்கப்பட்ட அக்காலத்தில் அங்கு அதிக விற்பனையைக் கொண்ட தமிழ் நாளிதழாகத் திகழ்ந்தது. தவிர கீழ் மற்றும் மேல் பர்மா (மியான்மர்), இலங்கை, பினாங்கு, சிங்கப்பூர், மலாய் மாநில கூட்டாட்சி, சுமாத்திரா, போர்னியோ, கொச்சின் இராச்சியம், சீனா மற்றும் தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா என விற்பனை விரிந்திருந்தது.
மகாகவி பாரதியார் தனது 22 -ஆம் வயதில் 1904 -ஆம் ஆண்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆனால் அரசுடன் இணங்கியிருக்க விரும்பிய சுப்பிரமணியன் அவர்களோடு எழுந்த கருத்து வேறுபாட்டால் 1906 -இல் விலகினார். பாரதி விலகிய பின்னர்ப் பஞ்சாபில் நிகழ்ந்த சம்பவங்களை அடுத்து அரசின் அநீதிகளை எதிர்த்து கட்டுரைகளாக வெளியிட்டார். இதனால் நாட்டுப்பிரிவினை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
1915 – இல் தி இந்து அதிபர் கஸ்தூரிரங்கனின் உறவினர் இரங்கசாமி அவர்களிடம் மேலாண்மையை ஒப்படைத்தார். அவரின் தலைமையில் நாளிதழ் புதுப்பொலிவு பெற்றது.
சி. ஆர். சீனிவாசன் அவர்களை வணிக மேலாளராகவும் பாரதியாரை 1920 -இல் மீண்டும் கொணர்ந்து ஆசிரியராகவும் அரசியல் தளத்தில் ஒரு சிறப்பு இலக்கிய நாளிதழாக மாற்றினார்.
1962 -இல் சீனிவாசன் அவர்களின் மறைவிற்குப் பிறகு இந்த நாளிதழும் புது தலைமுறை நாளிதழ்களான தினத்தந்தி போன்றவற்றுடன் போட்டியிட முடியாமல் 1970 களில் மூடப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் தேசத்தின் விடுதலைக்கும் சுதேசமித்திரனின் பங்கு சிறப்பானது. அனுபவமிக்க
க. நா. சுப்பிரமணியம், மு.வரதராசனார் மற்றும் எஸ். டி. எஸ். யோகி என்று பலரின் ஆக்கங்களை ஏந்தி வந்திருக்கிறது. கதை, கட்டுரை, கவிதைகளை வெளியிடுவதற்காக வார இதழ் ஒன்றை 1929 -இல் ஆரம்பித்தது. இன்று வரை மிகச் சிறந்த நாவலாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் சுதேசமித்திரன் வார இதழில் தான் தொடராக வெளிவந்தது. மு. கருணாநிதி எழுதிய பரப்பிரம்மம், க.நா.சு. எழுதிய படித்திருக்கிறீர்களா போன்ற மிகச் சிறந்த கட்டுரைத் தொடர்கள் இந்த இதழில் தான் வெளிவந்தன. சுப்பிரமணிய பாரதியார், அறிஞர் வ.ரா, சுத்தானந்த பாரதியார், முனைவர் மு.வ. ஆகியோர்களின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
நாளிதழ்களின் முக்கிய பணிகள்
1)செய்திகளை மக்களுக்கு அறிவித்தல்.
ஆனால் சினிமா சார்ந்த செய்திகளுக்கு மட்டுமே இன்றைய பத்திரிகைகள் முக்கியத்துவம் தருகிறார்கள்..
2)மக்களை நல்வழிப்படுத்துதல்.
கடன் தொல்லை, காதல் தோல்வி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செய்திகளுக்கு மட்டுமே இன்றைய பத்திரிகைகள் முன்னுரிமை தருகிறார்கள்..
3)மக்களை மகிழ்வித்தல்.
இளைஞர்களை சோம்பேறியாக்கும்
கிரிக்கெட் போன்ற செய்திகளுக்கு மட்டுமே இன்றைய பத்திரிகைகள் ஆதரவு தருகிறார்கள்..
4)சந்தைப்படுத்தி வியாபாரம் புரிதல்.
வியாபாரம் என்கின்ற பெயரில்
சினிமா விளம்பரம் மூலம் அதிக லாபத்திற்கு மட்டுமே குறி வைக்கிறார்கள்..
5)நடுவுநிலை தவறாமை.
பத்திரிக்கை என்பது
குதிரை வண்டியில் , மாட்டு வண்டியில் உள்ள சாட்டை போன்றது குதிரையோ, மாடோ சண்டித்தனம் செய்யும் போது
சாட்டையால் அடிப்பது மூலம் தனது இலக்கை நோக்கி எந்த குறைபாடும் இல்லாமல் வண்டியானது சென்றடையும்…
அது போல
அரசியல்வாதிகள் தவறு செய்யும் போது அல்லது நல்லது செய்யும் போது அதை மக்களிடம் எந்தத் தொய்வுமின்றி கொண்டு செல்ல வேண்டும் ஆனால் இன்றைய பத்திரிக்கைகள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்த சமயத்தில் யார் ஆளும் கட்சியோ அவர்களுக்கு மட்டுமே ஆதரவு தருகின்றன அவர்களின் புகழ் பாடுகின்றன, குறிப்பாய் குறைகளை சுட்டிக்காட்ட அடியோடு மறக்கின்றன நடுவுநிலை தவறாமை என்கிற பத்திரிக்கை தொழில் தர்மத்தை இழக்கின்றன…
6)பண்பாட்டைப் பேணிக்காத்தல்.
பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை இல்லாமல் நடிகைகளின் ஆபாச காட்சிகளை அட்டை படத்தில் போடுகிறார்கள்..
7)அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
துளியும் ஏற்படுத்துவது இல்லை இன்றைய இளைஞர்கள் பகலில் எரியும் விளக்காக இருக்க சமூக பொறுப்பற பத்திரிகையும் முக்கிய காரணம்.
8)கல்வி,வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல்.
பணம் கொடுத்தால் மட்டுமே கல்வி வேலை வாய்ப்பு செய்திகளை பிரசுரம் செய்வார்கள்…
9)மொழியுணர்வை ஊட்டுதல்.
இன்று தமிழில் பிழையின்றி எழுதுவது பேசுவது ஆச்சர்யமான ஒன்றாகும்…
10) நாட்டுப்பற்றை வளர்த்தல்.
நாட்டுப்பற்று என்பது ஒவ்வொரு சீசனக்கு மட்டுமே வருகிற வேடந்தங்கல் பறவைகள் போல ஒவ்வொரு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது மட்டுமே வெளிப்படுகிறது….
பத்திரிக்கை தினம்
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நாளாக தேசிய பத்திரிகை தினம் வருடம்தோறும் நவம்பர் 16 -ம் தேதியும், உலக பத்திரிக்கை தினமானது மே – 03 – ம் – தேதியும் கொண்டாடப்படுகிறது.
இந்நாள், ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கவுரவிக்கும் நாளாகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
பத்திரிக்கை என்பதும், பத்திரிக்கையாளன் என்பதும் மிக எளிதான காரியம் அல்ல இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் தனது வாழ்வை ஒரு பத்திரிக்கையாளனாக துவங்கி பிரதமர் என்கின்ற உயர்ந்த நிலைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
நேரம் காலம் பாராமல், இயற்கை சீற்றங்களுக்கும், இடர்பாடுகளுக்கு இடையில் தன்னலம் கருதாமல் செய்திகளை சேகரித்து மக்களிடையே கொண்டு செல்லும் பணியென்பது மகத்தான போற்றுதலுக்குரிய பணியாகும். பத்திரிகையாளர்கள் ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்து பணியாற்றி, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உறுதுணையாக அரணாக திகழும் பத்திரிகையாளர்களுக்கு சமூகப்பற்றாளனாகிய நான் என்றும் துணை நிற்பேன்..
இந்நன்னாளில் மென்மேலும் தங்கள் பணி சிறக்க அனைவருக்கும் பத்திரிக்கையாளர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்…
முனைவர் சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
7598534851