மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெரம்பூர் சென்னியநல்லூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அன்புமணன் (வயது 31). இவர் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், பழையார் கிராமத்தில் இருந்து சீர்காழியை நோக்கி பயணிகளோடு பஸ்சை ஓட்டி வந்துள்ளார்.
சீர்காழி கரிகுளம் முக்கூட்டு என்ற இடத்தில் வந்தபோது எதிரே புதுத்துறை கிராமத்தை சேர்ந்த வக்கீல்கள் ராஜேஷ், சிவா மற்றும் புத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜா ஆகிய 3 பேரும் வந்த காரும், பஸ்சும் உரசிக்கொண்டதாக தெரிகிறது. இதில் காரின் சைடு கண்ணாடி உடைந்து விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வக்கீல் ராஜேஷ் உள்பட 3 பேரும், விபத்துக்கு காரணமான தனியார் பஸ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே வந்தபோது வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இருதரப்பினரும் புகார் கொடுக்க சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு வக்கீல்கள் ராஜேஷ், சிவா, ராஜா ஆகிய 3 பேரும் பஸ் டிரைவர் அன்புமணனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அன்புமணன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வக்கீல்கள் ராஜேஷ், சிவா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்புடைய ராஜாவை வலைவீசி தேடிவருகின்றனர்.
போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.