தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பெய்த 16.5 சென்டிமீட்டர் அடை மழை காரணமாக பேராவூரணி சுற்றியுள்ள ஆண்டவன் கோயில் அருகில் உள்ள காட்டாற்று பாலத்திலும், பூக்கொல்லை காட்டாற்று பாலத்திலும், சித்தாதிக்காடு பாலத்திலும் மழைநீர் பாலத்தை கடந்து சென்றது, இதனால் பேராவூரணி தீவு போல் மாறி போக்குவரத்து முடங்கிப் போனது, ஏராளமான பொதுமக்கள் இந்த மூன்று பாலத்தை கடந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட கண்காணிப்பாளரும் அரசு முதன்மை செயலாளருமான விஜயகுமார், பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார், கூடுதல் ஆட்சியாளர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், பொதுப்பணித்துறை உயர் அலுவலர் கனிமொழி மற்றும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார், ஆகியோர் மூன்று தரைபாலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் அரசு முதன்மை செயலாளரிடம் இந்த மூன்று தரைபாலங்கள் கட்டி 75 வருடங்கள் ஆகிவிட்டன, பேராவூரணி பகுதியில் பெருமளவில் மழை பெய்தால் மூன்று தரை பாலங்களிலும் மழைநீர் பாலத்தை கடந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு அவசர உதவிக்கும் வெளியூர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது, எனவே உடனடியாக இந்த மூன்று தரைபாலங்களையும் கட்டித்தர வேண்டும் எனஇந்த தொகுதி மக்களின் சார்பாக முதன்மைச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.
தஞ்சைமாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது, பாலங்களை ஆய்வு செய்துள்ளோம், இந்த பாலங்கள் கட்டி பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என பல்வேறு முறை தொகுதி எம்எல்ஏ அசோக்குமார் எங்களிடம் பரிந்துரை செய்துள்ளார் இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம், கூடிய விரைவில் இப்பகுதியிலுள்ள மூன்று தரை பாலங்களையும் மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.
- Dr.வேத குஞ்சருளன்