தஞ்சை மாவட்டம், மக்கள் சட்ட உரிமைகள் கழக மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் “பாரத கலாரத்னா” வேத.குஞ்சருளன் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
தஞ்சை மாவட்டம்,பேராவூரணி பகுதி விவசாயம் மற்றும் தென்னை சாகுபடி மிகுந்த பகுதியாகும். பேராவூரணியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பேராவூரணி நகர் பகுதிக்குதான் வந்து வாங்கி செல்லவேண்டும். இப்படியிருக்க அறந்தாங்கி ரோட்டில், சித்தாதிக்காடு என்ற ஊரில் ஒரு பழைய தரைப்பாலமும், பட்டுக்கோட்டை சாலையில் ஆண்டவன் கோவில் அருகில் ஒரு பழையபாலமும், சேதுபாவாசத்திரம் சாலையில் பூக்கொல்லை கிராமத்தில் ஒரு பழைய பாலமும் பேராவூரணி நகருக்கு நுழைவதற்கு முன்பாக இருக்கிறது. தற்போது தீபாவளிக்கு முதல்நாள் பெய்த கனமழையினால் மூன்று பாலங்களின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் பேராவூரணி நகருக்குள் கிராமங்களிலிருந்து பொதுமக்கள் சென்று தீபாவளி பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதுபோன்ற கனமழை பேராவூரணி பகுதியில் பெய்தால் பேராவூரணி நகருக்கு வர முடியாமல் பேராவூரணி நகரம் தனி தீவாக ஒதுங்கிவிடுகிறது.. தமிழக அரசு பேராவூரணி பகுதியை கவனத்தில் கொண்டு மூன்று பாலங்களையும் மேம்பாலமாக கட்டி தந்து கிராமங்களிலிருந்து பேராவூரணி நகருக்கு பொதுமக்கள் சென்று வர வழிவகை செய்துதர வேண்டும்.
அறந்தாங்கியிலிருந்து பேராவூரணி, புதுக்கோட்டையிலிருந்து பேராவூரணி, பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணி, சேதுபாவாசத்திரத்திலிருந்து பேராவூரணி செல்லும் பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேல் பேருந்து போக்குவரத்து இல்லாமல் தனி தீவாக இருந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் உடல்நிலை சரியில்லாமல்போனாலோ, விஷ பூச்சிகள் கடித்து தஞ்சை மருத்துவ கல்லூரி, புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி போன்ற இடங்களுக்கு சிகிச்சைக்கு செல்ல வாடகை கார் எடுத்து செல்லும் நிலையில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது இதனை போக்க இரவு நேரங்களில், பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வழியாக மதுரை செல்லும் சில பேருந்துகளை பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணி வழியாக அறந்தாங்கி மதுரை செல்லவும், பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் செல்லவும், புதுக்கோட்டையிலிருந்து பேராவூரணி வழியாக சேதுபாவாசத்திரம் கட்டுமாவடி, மணமேல்குடி வழியாக, தொண்டி செல்லவும், அதேபோல் பட்டுக்கோட்டையிலிருந்து கடற்கரை சாலைவழியாக தொண்டி செல்லும் பேருந்து ஒன்றை பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வழியாக தொண்டி செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்து தந்து பேராவூரணி தனி தீவாக இல்லாமல் பொதுமக்களின் உயிர்கள் காக்கவும், வியாபாரிகளின் தொழில் வளர்ச்சி பெறவும் வசதியாக இருக்கும் ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் பேராவூரணியின் மீது தனி கவனம் செலுத்தி மேம்பாலங்கள், பேருந்து வசதிகள் செய்து தந்து பொதுமக்கள், வியாபாரிகள் கஷ்டம்போக்கியும், தொழில் வளர்ச்சி பெறவும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை பல நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யவும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தந்து உதவிடுமாறு பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவ்மனுவில் கூறியுள்ளார்.