தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 10 நாட்கள் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் கண்விழித்து பதிவு செய்தார்கள். அனைத்து கிராமங்களிலும் இரவு 9 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை நான்கு ஐந்து பேர்கள் லேப்டாப் மூலம் பதிவை தொடங்கி முடித்துள்ளார்கள்.
இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் என்ற பெயரில் எந்த கட்டணமும் இல்லை அனைவரும் பதிவு செய்யுங்கள் என்று எல்லா கிராமங்களிலும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாக்கண்ணு தொடங்கி வைத்தார். தலைவரிடம் பொதுமக்கள் கேட்டபோது எந்த கட்டணமும் இல்லை என்று சொல்லி பதிய சொல்லியுள்ளார். இரவு முழுவதும் வேலை செய்பவர்களுக்கு அனைத்து செலவுகளையும் தலைவரே பார்த்துள்ளார். அனைத்து கிராமங்களிலும் சுமார் 6500 பேருக்கு மேல் பதிவு செய்து விட்டார்கள்.
ஒரு வாரம் கழித்து ஊருக்கு ஊர், பதிவு செய்தவர்களுக்கு அட்டை வந்துள்ளது என்று கூறி ஒரு அட்டை ரூ 100 வீதம் வசூல் செய்துள்ளார்கள். ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால், எந்த பதிலும் இல்லை. சமூக ஆர்வலர்களின் அறிவுரையால் பலர் தப்பித்துவிட்டார்கள். நம்மிடம் புகார் வர நாம் ஆவணத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டால், மத்திய மாநில அரசுகளிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. நாங்களும் யாருக்கும் உத்தரவு கொடுக்க வில்லை. யாரை கேட்டு செய்தார்கள் என்று திரும்ப நம்மிடமே கேட்டார்கள். இந்த நூதன மோசடியை யார் செய்தது? ஊராட்சி மன்ற தலைவருக்கு யார் இதை செய்ய சொன்னது? ரூ 100 வீதம் வசூல் செய்த பணம் யாருக்கு போகின்றது. யார் யார் இந்த மோசடியில் கூட்டு என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து பண மோசடி செய்தவர்களை காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
வேலை இல்லாத இந்த நேரத்தில் மக்கள் செலவுக்கே கஷ்டப்படும் இந்த சூழ்நிலையில் பதிவுக்கு பணம் இல்லை என்று பதிய சொல்லி பிறகு ரூ 100 வீதம் வசூல் செய்ததால் ஊராட்சி மன்ற தலைவர் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதை நாம் அறிய முடிந்தது. சம்பந்தப்பட்ட ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்படுவார்களா? இதனை கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்?