தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை நிமித்தமாக மாவட்டத்தில் அதனை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா கந்தபுனேனி இ.கா.ப., அவர்களின் தலைமையில் 8 காவல் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு குழுவிற்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் என மொத்தம் 8 குழுவில் 8 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் (அனைவரும் பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்தவர்கள்), 8 வாகனங்கள் மற்றும் மீட்பு பணிகளுக்கான உபகரணங்களுடன் தஞ்சாவூர், வல்லம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய காவல் உட்கோட்ட தலைமை இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி மீட்பு பணிகளை தஞ்சாவூர் சரக காவல் மேற்பார்வை அதிகாரி திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குனர் (குற்றம்) அவர்களும், தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு. பர்வேஸ் குமார் இ.கா.ப., மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா கந்தபுனேனி இ.கா.ப அவர்களும் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தும், அப்பகுதிகளின் அருகே உள்ள முகாம்களை பார்வையிட்டும், அங்கு பணியில் உள்ள காவல் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகளையும் வழங்கினார்கள்.