காவல்பணியின்போது உயிரிழந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி பகுதியில் தலையில் வெட்டுக்காயத்துடன் அதிகளவு ரத்தம் வெளியேறிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.
நவல்பட்டு எல்லைப் பகுதியில் இருந்து ஆடுகளை ஏற்றி வந்த இரு சக்கர வாகனங்களை பூமிநாதன் துரத்தி வந்தபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியிருக்கக் கூடும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து டிஎஸ்பிக்கள் சிவசுப்பிரமணியன், அருண்மொழி அரசு தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள், 2 துணை ஆய்வாளர்கள் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் அவரது வீரதீரச் செயலைப் பாராட்டினார். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, பூமிநாதனின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.