‘ஒமைக்ரான்’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
‘ஒமைக்ரான்’ வைரஸ் குறித்து மக்களிடையே பதற்றம் தேவையில்லை. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை உடையதாக இருந்ததால் முக்கியத்துவம் அடைந்து பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் உஷார்படுத்தி உள்ளது. ‘ஒமைக்ரான்’ பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இதுவரை 20 விமானங்கள் வந்துள்ளன. பாதிப்பற்ற நாடுகளில் இருந்து 85 விமானம் வந்துள்ளது.
இதுவரை விமான நிலையங்களில் மொத்தம் 12,188 பேருக்கு சோதனை செய்துள்ளோம். இதில் 6 பேருக்கு ‘ஒமைக்ரான்’ மருத்துவ பரிசோதனை செய்துள்ளோம். ஆனால் இதுவரை யாருக்கும் ‘ஒமைக்ரான்’ கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமாக உள்ளனர். எனவே ‘ஒமைக்ரான்’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ‘ஒமைக்ரான்’ வராமல் இருக்க 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். தவறாமல் முக கவசம் அணிய வேண்டும். இதை தவறாமல் கடை பிடித்தால் நமக்கு பாதிப்பு வராது.
எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 3-வது அலை வந்தாலும் வராவிட்டாலும் மருத்துவ கட்டமைப்பு நம்மிடம் வலுவாக உள்ளது. எனவே சுயகட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஊரடங்கு தேவைப்படாது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் எதுவும் இல்லை. ஆனாலும் இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறும் வலியுறுத்தல்களை பொறுத்து முடிவு செய்வோம்.
டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் ஆனால் ‘ஒமைக்ரான்’ வைரசை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமின்றி மரபணு பரிசோதனையும் செய்து தான் ஒருமுடிவுக்கு வர முடிகிறது. அதனால்தான் அதுவரை கொரோனா பாதிப்பு உள்ளவர்களை ஆஸ்பத்திரியில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.