திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த் 18; பாலிடெக்னிக் இறுதியாண்டு படித்து வருகிறார். லக்னாம்பேட்டை என்ற கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும்போது செம்மறி ஆடுகள் மீது மோதி கீழே விழுந்ததில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.
அவ்வழியாக காரில் வந்த மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர் வனஜா கீழே கிடந்த வசந்தை பரிசோதித்து பார்த்துள்ளார். அவரது இதயம் செயல்படாததை அறிந்து, அவசர கால முதலுதவியாக இதய பகுதியை கைகளால் மசாஜ் ( CPR சிகிச்சை) செய்ததில் ரத்த ஓட்டம் சீராகி மாணவரின் இதயம் மீண்டும் செயல்பட துவங்கியது.
உடனடியாக மாணவருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவர் உயிரை காப்பாற்றிய செவிலியர் திருமதி. வனஜா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார்.IPS. அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.