தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 121 பேருக்கு ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் கொரோனா தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 10 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனினும், ஆன்லைன் வாயிலாக மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது, பொதுத் தேர்வு எழுத உள்ள 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக, 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால், மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறை வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலமும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.