தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 46) இவரது மனைவி நாகூர் மாலா (வயது 40) இவர்களின் 18 வயது மகள் துளசி. 2018 ஆம் ஆண்டு பேராவூரணி மூவேந்தர் மேல்நிலைப் பள்ளியில் (455/500) மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை பிருந்தாவன் பள்ளியில் (421/600) மதிப்பெண் பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு தனியாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இதில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு திருச்சி அருகே துறையூரில் உள்ள சௌடாம்பிகா என்னும் தனியார் பள்ளியில் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றுள்ளார்.
தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்விலும் அவர் வெற்றி பெறவில்லை. இதனால் துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார்.. இந்நிலையில் வேறு என்ஜினீயரிங் அல்லது அக்ரி படிப்பில் சேருவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் தனியார் நீட் பயிற்சி மையம் 40 ஆயிரம் ரூபாய் பணம் கட்டிய நிலையில், மேலும் பாக்கிப் பணம் தரவேண்டும் என்று சொல்லி சான்றிதழ்களை தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நீட் தேர்விலும் சேர முடியவில்லை. வேறு கல்லூரிக்கும் செல்ல முடியவில்லை என்று துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி, நாகூர் மாலாவும் வயலுக்கு வேலைக்கு சென்று விட்டனர். பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஓட்டு வீட்டின் கூரையில் மதியம் 12 மணிக்கு துளசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
2 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், துளசி தூக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் துளசியின் சடலத்தை மீட்டு கட்டிலில் கிடத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஊமத்தநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் பேராவூரணி காவல்துறைக்கு தகவல் அளித்தார். மாணவியின் மரணம் குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெற்றோரை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டது குறித்து முதலமைச்சருக்கு தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பேராவூரணி வட்டாட்சியர், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
- Dr. வேத குஞ்சருளன்