பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தின் கீழ் மொத்தம் 192 பொதுவிநியோக திட்ட அங்காடிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த வட்டத்தில் மொத்தம் சுமார் 1,14,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த வட்டத்தில் மொத்தம் 175 கிராமங்கள் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வட்டங்களில் பட்டுக்கோட்டை வட்டம் பெரிய வட்டமாகும். இந்த அலுவலகத்தில் மொத்தம் இரண்டு உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களும் தற்போது பவானிசாகர் பயிற்சிக்கு சென்று விட்டதாக தெரியவருகின்றது.
குடும்ப அட்டை தொடர்பான பணிகளுக்கு வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வருகின்ற மக்களுக்கு பதில் சொல்லக்கூட அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது. அன்றாடம் வரக்கூடிய பொதுமக்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் பதில் கூற வேண்டியுள்ளது. வட்ட வழங்கல் அலுவலர் முகாம் அல்லது மாவட்ட ஆட்சியர் நடத்தும் ஆய்வு கூட்டத்திற்கு சென்று விட்டால் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. எனவே இந்த அலுவலகத்திற்கு பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் பணியாளர் நியமனம் செய்ய வேண்டும்.
வட்ட வழங்கல் அலுவலரிடம் விசாரணை மேற்கொண்ட போது பணியில் இருக்கும் இரண்டு தற்காலிக பணியாளர்களும் பயிற்சி வகுப்பு சென்றுள்ளதாலும் பணியாளர் பற்றாக்குறை காரணத்தாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.