கடையநல்லூரில் பணி நிறைவு பெற்ற ராணுவ வீரரை அவரது மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தென்காசி, கடையநல்லூரை அடுத்த முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன்மாரி. இவர் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே தனது சொந்த கிராமத்தில் இலவச ராணுவ பயிற்சி மற்றும் போலீஸ் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். தற்போது, ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றிய நிலையில் பணி நிறைவு பெற்று ஊர் திரும்பினார். இதையடுத்து அவரை வரவேற்க வந்த அவருடைய மாணவர்கள் ரயில்வே நிலையத்தில் இருந்து, வீடுவரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தவாறு அழைத்து வந்தனர். ஓய்வு பெற்று, ராணுவ வீரர் ஊர் திரும்பியதை மாணவர்கள் திருவிழாவிற்கு இணையாக கொண்டாடினர்.
சிவன்மாரி, இலவசமாக கல்வியளித்து ஏழை மாணவர்கள் பலருக்கு அரசு பணிகள் கிடைக்க வழிவகை செய்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். கல்வியளிக்கும் ராணுவ வீரரை அவரது மாணவர்கள் தோளில் சுமந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.