பொதுவாக ஒரு நாட்டின் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர்.
புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் இளைஞர்களை ஒதுக்கிவிட்டு புறக்கணித்து விட்டு விலக்கி வைத்துவிட்டு ஒரு நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாத காரியமாகும்.
எனவே தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தான் நாடு உள்ளது என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.
யார் இளைஞர்கள்?
15 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களை இளைஞர்கள் என ஐ.நா.சபை வரையறை செய்துள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர் இளைஞர்களாவர்.
மேலும் டீன் ஏஜ் பருவத்தினர் என்று கூறுவார்கள் அந்த டீன்ஏஜ் கான அர்த்தம் என்னவென்றால் ஒரு இளைஞனின் வயதானது 12 வயது முடிந்து 13 வது வயதில் அதாவது tலீவீக்ஷீtமீமீஸீ முதல் ஸீவீஸீமீtமீமீஸீ வரை ( 13 வயது முதல் 19 வயது வரை) உள்ள பருவத்தையே டீன்-ஏஜ் பருவம் என்று கூறுகிறார்கள்.
இந்த பருவத்தில்தான் உடலளவிலும் உள்ளம் அளவிலும் மனதளவிலும் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உண்டாக்கக்கூடிய பருவமாக இருக்கிறது.
இந்த இக்கட்டான பருவ வயதில் ஒரு இளைஞனின் நடத்தையை பொறுத்தே அந்த இளைஞனின் எதிர்காலம் சிறப்பானதாகவும் அல்லது சின்னா பின்னமாகவும் அமைகிறது.
இன்று ‘டிக்-டாக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல்’ எனும் சமூக வலைத்தள வலைகளுக்குள் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் இளைய தலைமுறையின் இதயங்களுக்கு பகுத்தறிவு என்கிற நீரோட்டத்தை பாய்ச்சவேண்டும் வேருக்குள் நீர் ஊற்றி இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் வசந்தமாய் வாழ நாம் கைகோர்க்க வேண்டிய தருணம் இதுவே ஆகும்.
அந்த வகையில் வீரத்துறவி விவேகானந்தர் அவர்களின் வாழ்க்கை மற்றும் அக்கினி சிறகை விரித்து ஆகாயத்தை அளந்த அப்துல் கலாம் ஐயா அவர்களின் வாழ்க்கையை நான் இத்தருணத்தில் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்…
தேசிய இளைஞர் தினமும் வீரத்துறவி விவேகானந்தரின் வாழ்க்கையும்
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து, அதிலிருந்து நல் செயல்கள் விளையும். பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது என்று நற் கதைகளைக் கூறி இளைஞர்களின் நாடி நரம்புகளுக்கு நம்பிக்கையை ஊட்டியவர் விவேகானந்தர் ஆவார்.
வங்காளத்தில் இருந்து ஒரு வாலிப புயல் குமரி வரைக்கும் வீசி ஒரு புத்தெழுச்சியை புகுத்தியது. அவர் தான் உலகம் போற்றிய உறுதி மனிதராய் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் ஆவர்.
கூடு கட்டுவதற்கு ஒரு பறவை முதல் குச்சியை எடுத்துச் செல்வதைப்போல் இளைய சமூகத்துக்கான முதல் விழிப்பை தன் இதயத்தில் இருந்து எடுத்து வைத்தவர்.
ஒரு சிலைக்கு கண் திறக்கும் சிற்பி போல, திசைகள் தேடும் இளைஞர்களின் அகக் கண்களை அறிவு தேடலால் திறந்து வைத்தவர்.
நூறு வீரம் மிக்க இளைஞர்களை தாருங்கள் இந்த தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்ற வீர சபதத்தை முன் வைத்து தொடங்கி கால்பந்தாட்டத்தில் கடவுளைக் காணலாம் என்ற புதிய ஆன்மிகத்தை வடிவப்படுத்தியது வரைக்கும் விவேகானந்தன் என்ற இளைஞனுக்கு கனன்று விட்டு எரிந்த அக்கினி அறிவை யாரும் புறக்கணிக்க முடியாது.
ராமகிருஷ்ணர் எனும் மகானிடம் தன் பகுத்தறிவை பட்டை தீட்டிக்கொண்டு உறுதிகொண்ட நெஞ்சினாய் உலக சபைக்கு முன் தன் ஆற்றல் மிகுந்த பேச்சால் அறிவுலகம் வியக்க வைத்தவர் விவேகானந்தர்.
இந்த மண்ணின் புதுயுக உந்து சக்தியாக ஆற்றலின் இடி முழக்கம் போல் தோற்றத்தில் மிடுக்கு கொண்டு நம்பிக்கை சுடர் விளக்கை இரு கையில் ஏந்திக்கொண்டு இமயம் முதல் குமரி வரை எழுச்சி தீபம் ஏற்றிவைத்தார்.
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் என்று கலங்கி நிற்கும் இதயங்களுக்கு கலங்கரை விளக்கத்தை ஏற்றிவைத்தார்.
உற்சாகமாக இருக்க தொடங்குவது தான் வெற்றிகரமான வாழ்க்கை தொடங்குவதற்கான முதல் அறிகுறி என்று சோம்பித் திரியும் வாழ்வு சோபிதம் பெறாது என்று இளைஞர்களின் இதயத்துக்குள் நம்பிக்கையை ஊற்றிவைத்தார்.
ஆயிரமாயிரம் சபைகளிலே ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றினாலும் திரும்பத் திரும்ப அவர் இளைஞர்களின் திசைகளை நோக்கி உரக்கச்சொன்னது இதைத்தான். உன்மீதே உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.
இளைஞர்களின் மீதான நம்பிக்கை
வீரத்துறவி விவேகானந்தர் அவர்கள் இளைஞர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் பிறந்த ஜனவரி 12, `இளைஞர் தினம்’ என்று மைய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்களின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையால்தான், “100 இளைஞர் களை தாருங்கள் உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்” என்றார். விவேகானந்தரின் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை தங்களின் மனத்தில் கொண்டு, செயற்கரிய செயல்களை செய்பவர்களாக மாணவர்கள் சரித்திரத்தில் இடம்பெற வேண்டுமென்று
இளைஞர்களின் சக்தியை பெரிதும் நம்பியவர் சுவாமி விவேகானந்தர். பலத்தைக் கொண்டு, பலவீனத்தை போக்க வேண்டும். வந்தோம் இருந்தோம் என்று போவது வாழ்க்கை அல்ல என்பதைப் புரியவைத்தவர் சுவாமி விவேகானந்தர்.
உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன. உனக்கு நிகர் நீயே. உன் மீது நம்பிக்கை வை. உன்னால் எதுவும் முடியும். வழக்கமான சம்பிரதாயமான சடங்கில் விவேகானந்தருக்கு நம்பிக்கை இல்லை.
நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன,
தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
இதயம் சொல்வதை செய் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு.
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல.
இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். அறிவு⸴ ஆற்றல்⸴ அனுபவம்⸴ துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயற்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றின் அடிப்படையிலேயே நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. சமுதாய உணர்வுடன் இளைஞர்கள் வளரும் போதுதான் வீடும்⸴ நாடும் நலம் பெறும்.
மேற்காணும் நற் கருத்துகளையும் பொன்மொழிகளையும் கூறி இளைஞர்களின் மனதில் நம்பிக்கை என்கிற ஒரு ஒளியை ஏற்றி வைத்தார் விவேகானந்தர் அவர்கள் எனவே அவரது பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக நாம் கொண்டாடி வருவது நம் நாட்டுக்கே பெருமை தரக்கூடிய விஷயமாகும்.
தேசிய இளைஞர் எழுச்சி தினமும் மற்றும் அக்னி சிறகை விரித்து ஆகாயத்தை அளந்த அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையும்
மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் பெரும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட அப்துல்கலாம் ஐயாவின் பிறந்தநாளான அக்டோபர் 15 ஆம் தேதி அன்று நாம் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடி கடைப்பிடித்து வருகின்றோம்.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாவர். இத்தகைய இளைஞர்கள் மீது பெரும் அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களேயாவர். இவர் ஓர் தலைசிறந்த விஞ்ஞானி⸴ தொழிநுட்ப வல்லுனர்⸴ மிகப் பெரிய பொருளாளர்⸴ 11 வது குடியரசுத் தலைவர் ஆவார்.
இவரின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் நாளன்று இளைஞர் எழுச்சி நாளாகக் தமிழ்நாட்டு அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவர் ஓர் இஸ்லாமிய ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவராவார். குடும்பச்சூழல் காரணமாகப் பள்ளி நேரம் போக மற்றைய நேரங்களில் செய்தித்தாள் விநியோகம் செய்தார்.
1954 – இல் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். 1986 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரும் விருதான “பத்மபூஷன்ˮ விருதைப் பெற்றார்.
11- வது குடியரசுத் தலைவராக 2002 ல் பதவியேற்றார். பதவி ஏற்பதற்கு முன்னர் “பாரத ரத்னாˮ விருது மத்திய அரசினால் இவருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு பல விருதுகளைப் பெற்ற ஏவுகணை நாயகன் ஆகிய அப்துல்கலாம் அவர்கள் 2015 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
அப்துல்கலாமும் இளைஞர்களும்
எளிமையான வாழ்வும் இனிமையான பேச்சும் கொண்ட டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவராவார். எதிர்கால இந்தியா இளைஞர் கையில் என்றார்.
“கனவு காணுங்கள் அந்தக் கனவை நனவாக்கப் பாடுபடுங்கள்ˮ எனும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்றச் செய்தவராவர். குடியரசுத் தலைவராக இருந்த போதும் அதன் பின்பும் அவரது சிந்தனை இளைஞர்களைப் பற்றியதாகவே இருந்தது.
2020 இல் இந்தியா வல்லரசாகும் என்பதில் நம்பிக்கை கொண்ட அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களிடையே தன்னம்பிக்கை அவசியம் எனக் கருதினார்.
“வெற்றி பெற வேண்டும் என்றால் பதட்டமில்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழிˮ என இளைஞர்களுக்கு வெற்றியின் ரகசியத்தை போதித்தார்.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
இன்றைய இளைஞர்களின் கைகளில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது. இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.
அறிவு⸴ ஆற்றல்⸴ அனுபவம்⸴ துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயற்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றின் அடிப்படையிலேயே நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. சமுதாய உணர்வுடன் இளைஞர்கள் வளரும் போதுதான் வீடும்⸴ நாடும் நலம் பெறும்.
இளைஞர் எழுச்சி நாளின் சிறப்பு
மாணவர்களுடன் உரையாடுவதை தனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாளில் இளைஞர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும். இந்நாளில் மாணவ⸴ மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் கல்லூரி மாணவ⸴ மாணவிகளுக்கு அறிவியல் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு இந்நாள் சிறப்பிக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி அறிவியல் கண்காட்சிகள் தமிழ்நாட்டின் பல இடங்களில் இடம்பெறும்.
இன்றைய இளைஞர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் மற்றும் செய்யக் கூடாத காரியங்கள் பின்வருமாறு
- ஒவ்வொரு ஊரிலும் உள்ள மதுபான கடைகளை இன்றைய இளைஞர்கள் நாடாமல் இருக்க ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகத்தை உருவாக்கி போட்டித்தேர்வுக்கு தன்னைத் தயார் செய்து கொள்ளலாம் அதன் மூலம் அரசு வேலைக்கு செல்வது மிக எளிதாகி விடும் அதனால் பெற்றோரின் கனவு நனவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
- பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற கோட்பாட்டின்படி முன்னோர்கள் கடைபிடித்த ஜாதி மத பேதத்தை கடைபிடிக்காமல், கண்மூடித்தனமாக ஜாதி கட்சிகளில் சேராமல்,சண்டை சச்சரவுகளை உண்டாகாமல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் பொதுநல நோக்கோடு ஜாதி மத பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நற்பணி களையும் நல்ல காரியங்களையும் செய்யலாம்.
- வாலிப வயதில் ஏற்படும் பருவ மாற்றத்தால் தடம் பதிக்கும் வயதில் தடம் மாறாமல் இருக்க பிஞ்சிலேயே பழுத்து வெம்பி போகாமலிருக்க மது சிகரெட் மற்றும் போதைப் பொருட்களுக்கு நான் அடிமையாக மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு அதன்படி நடக்கலாம்.
- எந்த சூழ்நிலையிலும் வாழ்வில் அறம் சார்ந்து அகிம்சையை சார்ந்து மட்டுமே நான் செல்வேன் என்று மனதில் உறுதி ஏற்று அதன்படி அதை நடைமுறைப்படுத்தலாம். மாணவர்கள் ஒன்று சேர்ந்து அகிம்சை வழியில் போராடிய ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டது போல மற்ற பிரச்சனைகளுக்கும் உரிமை குரல் கொடுக்கலாம் அறவழியில் நிற்கலாம் அகிம்சை வழியில் செல்லலாம்.
- ஏழை எளியோர், திறமை இருந்தும் வறுமையில் வாடும் அனைத்து தரப்பு சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முடியாதவர்கள், வயதானவர்கள் போன்ற பிறர் உதவியை நாடி வாழக்கூடிய நலிந்த மக்களுக்கு உதவிகள் செய்ய நற்பணிமன்றம் அமைக்கலாம்.
- கோடையின் போது தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் மழைக்காலத்தின் பொழுது வெள்ள நீரில் பயிர்கள் மூழ்காமல் இருக்க ஊர்கள் தோறும் உள்ள ஏரிகளை குளங்களை குட்டைகளை அகலப்படுத்தலாம் ஆழப்படுத்தலாம், மழை நீர் செல்லும் வழித்தடங்களை கரைகளை பலப்படுத்தலாம் மற்றும் மழைநீர் வடிகால் சேகரிப்பு முறைகளை உண்டாக்கலாம்.
- இன்றைய காலகட்டத்தில் வீடியோ கேம் போன்ற விபரீத விளையாட்டுக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க நேரத்தை விரயமாக்கும் விபரீத விளையாட்டுக்களில் நாட்டம் செலுத்தாமல் பொழுதுபோக்கிற்கு அடிமையாகாமல் மரக்கன்று நடுதல், பனை விதைகளை நடுதல், தோட்ட கலைக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டு கால நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கலாம்.
- தமிழ் மாதங்களை கூட முழுமையாக சொல்லத்தெரியாத தலைமுறையாக இன்றைய தலைமுறை உள்ளது இதை எண்ணி நாம் வேதனைப் படுவதா வெட்கப்படுவது என்று தெரியவில்லை எனவே இன்றைய இளைஞர்கள் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் தனது இரு கண்களாக மதித்து இரண்டையும் நங்கு கசடற கற்றுக்கொள்ள வேண்டும்.
- இன்றைய காலத்தில் வாழும் இளைஞர்கள் காலையில் கண் விழித்த உடனே அலைபேசியில் கண் விழிக்கிறார்கள் மாலையில் உறங்கும் வேளை இவரை அலைபேசியில் மூழ்கி கிடக்கிறார்கள் எனவே அலைபேசியை அதிகம் பயன்படுத்தாமல் அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் வீர தீர விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் இந்த குர்ஆனோ போன்ற காலகட்டத்தில் எண்ணற்ற இளைஞர்கள் கூட நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து விட்டார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.
- உற்றார் உறவினர் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பாசத்தை பரிமாற நேசத்தை காட்ட நேரம் ஒதுக்க வேண்டும் பேஸ்புக் வாட்ஸ் அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் மூழ்கி கிடைக்காமல் பந்தபாசம் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் இச்சமூக மேன்மைக்கான பொது நல நோக்கத்தோடு தனது அறிவை ஆற்றலை இச்சமுதாயத்திற்கு இன்றைய இளைஞர்கள் தன்னை முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
- அரசு பதவி வகித்த போதும் அமைச்சராக இருந்த பொழுதும் தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கரை படியாத கரம் கொண்ட கக்கன் மற்றும் அவரை உருவாக்கிய கர்மவீரர் காமராஜர் போன்ற மிகச்சிறந்த ஆளுமைகளை இன்றைய இளைஞர்கள் கண்டறிய வேண்டும்.
தனது நிஜ கதாநாயகர்களை திரையில் தேடாமல் சைக்கிளின் பின் ஓடாமல்
அவர் சரியில்லை இவர் சரியில்லை என்று புலம்பி விட்டு, நான் ஆண்ட ஜாதி நீ அடிமை ஜாதி என்று வீர வசனம் பேசிவிட்டு நோட்டாவுக்கு வாக்கு செலுத்தாமல் போலி அரசியல்வாதிகள் எளிதில் வெற்றி பெறுவதற்கு நோட்டோ என்கிற நோ பாலை போடாமல் உண்மையான சமூக அக்கறையுள்ள சமூக மேன்மைக்கு பாடுபடும் நபர்களுக்கு தனது வாக்கை செலுத்த வேண்டும் அடுத்த காமராஜர் அடுத்த கக்கன் யார் என்பதை இன்றைய இளைஞர்கள் தனது செயலால் சிந்தித்து ஒன்றுசேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
முடிவுரை: –
ஒரு வனத்துக்குள் சுவாமி விவேகானந்தர் அவர்கள் தன்னன் தனியாக பயணப்பட வேண்டிய சூழல் அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழலில் அவரை துரத்துகின்றன சில ஓநாய்கள்.
சிறிது தூரம் அஞ்சி ஓடியவர் ஒரு கட்டத்தில் நின்று நிதானித்து திரும்புகிறார். ஓடுவதால் இனி பயனில்லை என்று முடிவு கொண்டு மன தைரியத்துடன் துணிச்சலாக ஓநாய்களை எதிர்த்து நிற்க விரட்டி வந்த ஓநாய்கள் மிரண்டோடி விடுகின்றன.
இந்த அனுபவத்தை அவர் இளைஞர்களுக்கு வடிவப்படுத்தும் விதமே அவரது தனித்துவமாகிறது. வாழ்வில் பிரச்சினைகள் உன்னை துரத்தும். நின்று உறுதியோடு திரும்பி பிரச்சினையை எதிர்கொள்ள தயாரானால் பிரச்சினைகள் உன்னைக்கண்டு பின்வாங்கும் என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர் அவர்கள். இந்த ஓநாய் துரத்தும் நிகழ்வானது நம் வாழ்வில் அனைத்து விதமான வாழ்வியல் நிகழ்வுகளுக்கும் கனகச்சிதமாக பொருந்தக்கூடிய நிகழ்வாகும்.
தனது புத்தகத்தை அடகு வைத்து படிக்கின்ற இக்கட்டான சூழ்நிலை உண்டான போதும் கடைசிவரை மனம் தளராமல் போராடி அக்னிச் சிறகு விரித்த அப்துல் கலாம் ஐயா அவர்கள்
எதிர்காலம் சிறக்க இன்றைய இளைஞர்கள் கனவு காண வேண்டும் எனக் கூறிய கற்பக விருட்சம் ஆவார்.
வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதீர்கள்⸴ வாழ்க்கை என்பது கடமை நிறைவேற்றுங்கள்⸴ வாழ்க்கை என்பது ஒரு இலட்சியம் சாதியுங்கள்⸴ வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் வென்று காட்டுங்கள் என அவர் கூறிய பொன்மொழிகளுக்கிணங்க வாழ்க்கையை ஒவ்வொரு இளைஞர்களும் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்போது தான் இந்திய நாடு வளம் பெறும்.
ஒவ்வொரு இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர்.
சாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே, பாரத கலாச்சாரம். இதில் மலிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை. பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாகக் கொள்ளாமல் உலக நன்மை என்னும் பரந்துபட்ட சிந்தனையை இளைஞர்கள் தங்களின் மனத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்தை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இறுதியாக
இன்றைய இளைஞர்களின் புத்தியும் உத்தியும் சக்தியும்
பகலில் எரியும் விளக்காக கடலில் பெய்கின்ற மழையாக எதற்குமே பயன்படாத காட்டாற்று வெள்ளமாக இல்லாமல்
இரவில் எரிகின்ற விளக்காகவும்,
நஞ்சை நிலத்தில் பெய்கின்ற மழையாகவும்,
இரு கரைகளில் அடங்கி ஓடி அணையில் தேங்கி பயன்தரக்கூடிய ஆற்று நீராகவும் இருக்க ஆசைப்படுகிறேன்
வீரத்துறவி விவேகானந்தர் மற்றும் அக்னி நாயகன் அப்துல்கலாம் ஆகியோரின் கனவு நனவாக அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் அதற்கு இன்றைய இளைஞர்கள் முன் வரவேண்டும்.!!!.
வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு தொடரும்..
–
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
செல்: 7598534851