பேராவூரணி அருகே ரயில்வே சுரங்கப் பாதையை மாற்றி மேம்பாலம் அமைக்க வேண்டி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் பிப்8. ல் நடக்கிறது.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சொர்ணகாடு கிராமத்தில் காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் அகல ரயில் பாதையில் கேட் எண் 132 .இந்த சாலை சுமார் 25 கிராமங்களை இணைக்கும் சாலையாகும். மேலும் கடற்கரை ஈசிஆர் இணைப்புச் சாலையாகவும் உள்ளது. இச்சாலை வழியே சொர்ணகாடு, வளப்பிரமன்காடு, மணக்காடு, மாத்தூர் ராமசாமிபுரம், ரெட்டவயல் ஆகிய 6 ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 25 கிராமங்கள் செல்லக்கூடிய சாலையாகும். தற்போது ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட்டை எடுத்துவிட்டு ரயில்வே சுரங்கப் பாதையாக மாற்றம் செய்தனர்.
ஆனால் இந்த சுரங்கப்பாதை கதிர் அறுவடை இயந்திரம் கொண்டு செல்லவோ, பேருந்து, லாரி, பள்ளிவாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாத வண்ணம் பாம்புபோல் வளைவுகள் வைத்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு வடிவமைத்துள்ளனர். ஒரு புறம் செல்லும் வாகனத்தில் மறு புறத்திலிருந்து வரும் வாகனம் தெரியாத அளவிற்கு வளைவுகள் உள்ளது. அதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுரங்கப் பாதையாக இருப்பதால் மழைக் காலங்களில் 10 அடிக்கு மேல் இந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் நிரம்பிவிடுகிறது.
இதனால் போக்குவரத்துகள் பாதிக்கப்படுகின்றன. மோட்டார் வைத்து அப்புறப்படுத்தும் போது அந்த இடம் பாசிகள் படர்ந்து நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி கீழேவிழும் நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் சரியாக கட்டித் தருவதாக கூறி இறுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தவறாக வடிவமைத்து தரைக்கீழ் பாலம் கட்டி உள்ளனர்.
இது செங்குத்தாக இருப்பதாலும், ஒரு வாகனம் வரும்போது எதிரே வரும் வாகனம் ஒதுங்க முடியாத நிலையிலும் உள்ளது. எந்த கனரக வாகனமும், பேருந்துகள், லாரிகள், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் இருப்பதால் இந்தப் பாலத்தை மாற்றி மேம்பாலம் ஆக அமைத்து தர வலியுறுத்தி பிப்ரவரி 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியல், ரயில் மறியல் நடத்த உள்ளதாக சொர்ணகாடு வளப்பிரமன்காடு, மாத்தூர் ராமசாமி புரம், பின்னவாசல், ரெட்டவயல் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தப் போவதாக துண்டு நோட்டீஸ் கொடுத்து அறிவித்துள்ளனர்.
– Dr. வேத குஞ்சருளன்