தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கியதும் நீட் தேர்வில் 514 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசுப் பள்ளி மாணவன் சிவா சென்னை எம்.எம்.சி மருத்துவக்கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார்.
தொடர்ந்து நடந்த கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட சுமார் 35 மாணவ, மாணவிகளில் 20 மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ்சும் 2 மாணவிகள் பிடிஎஸ்சும் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு 18 மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்கச் சென்ற நிலையில் இந்த ஆண்டு 22 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பிற்குச் செல்கின்றனர். இதில் வழக்கம் போல அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே அதிகம்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்த மாணவிகளில் 7 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் நடந்த மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில் தீபிகா மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, வாலண்டினா தேனி அரசு மருத்துவக்கல்லூரி, கனிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, சுவாதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி, யமுனா திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். மேலும் நிஷாலினி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி என ஒரே பள்ளியில் படித்த 6 மாணவிகளும் எம்.பி.பி.எஸ் படிக்க தேர்வாகி உள்ளனர். மேலும் நிஷா என்ற மாணவிக்கு திருநெல்வேலி பல் மருத்துவக் கல்லூரியிலும் படிக்க தேர்வாகி உள்ளனர்.
இதேபோல கடந்த ஆண்டு இதே கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் மருத்துவம் படிக்க தேர்வாகி பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மாநிலத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்தான் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள் என்ற பெருமை பெற்றுள்ளது. தொடர்ந்த இரண்டு வருடங்களில் 11 மாணவிகளை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்ப பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை பெற்றோர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிகிறது.
இதேபோல கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிலட்டூரில் 2 பேர், அரயப்பட்டியில் 2 பேர், எல்.என்.புரம், வடகாடு, மேற்பனைக்காடு ஆகிய ஊர்களில் தலா ஒருவர் மருத்துவர் ஆகிறார்கள்.