சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.2 லட்சமாக வழங்கப்படவுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் பிப்.25-ஆம் தேதி வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
சாலை விபத்துகளில் பலத்த காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக தற்சமயம் வழங்கப்படும் தொகை ரூ.12,500-இல் இருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்படுகிறது. விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்படும் தொகை ரூ.25,000-இல் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
கடந்த 1989-ஆம் ஆண்டின் நிவாரண உதவித் திட்டத்துக்கு மாற்றாக, 2022-ஆம் ஆண்டின் மோட்டார் வாகன விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டம், வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இழப்பீடு கேட்டு பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சமீபத்திய தகவல்படி, கடந்த 2020-இல் நாடு முழுவதும் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றின் காரணமாக 1,31,714 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.