இட மாறுதலுக்காக ஆசிரியர்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட ஆசிரியரால் எப்படி ஒழுக்கமான கல்வியை கொடுக்க முடியும் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பகுதியில் ஆசிரியராக பணியாற்றியவர் டேவிட் லியோ. இவரை திடீரென இடமாறுதல் செய்ததையும், சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து விடுவித்ததையும் ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடும்போது உறுதியான பல தகவல்களை தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்து இடமாறுதல் பெறும் ஆசிரியர் ஒருவரால் பள்ளியில் மாணவர்களிடம் எப்படி ஒழுக்கமான கல்வியை கொடுக்க முடியும். இது மிகுந்த கவலையைத் தரக் கூடியதாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தவறான பின் விளைவை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னை தென்மாவட்டங்களில் அதிகளவில் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் கல்வித்துறை முதன்மை செயலர் கவனம் செலுத்த வேண்டும்.
இடமாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கப்படும் குற்றச்சாட்டு அதிகம் வருவதால், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. இந்த விவகாரம் குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், துவக்க கல்வி இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மற்றும் புதுக்கோட்டை கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.