பல்லாண்டுக் காலமாக புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் துயரங்களுடன் வாழ்ந்துவரும் அன்றாடக் கூலிகள் ஏராளம். இது போன்ற விளிம்பு நிலை மக்களைக் கண்டறிந்து, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதுடன் குடிநீர், மின்சாரம், சாலை, கழிவு நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்துள்ளார், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இந்தத் திட்டத்துக்கு ‘செந்தமிழ் நகர்’ எனப் பெயரிட்டுச் செயல்படுத்திவரும் மாவட்ட ஆட்சியர், ஊருக்கு தலா 25 குடும்பங்கள் என்கிற அடிப்படையில், வீடற்ற ஏழைகளைச் சொந்த வீட்டில் வாழ வைப்பதற்கான முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.
ஆலக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள செந்தமிழ் நகருக்குச் சென்றோம். அப்பகுதி பயனாளியான பழனியம்மாள் ‘‘இந்த இடத்துக்குப் பேரு காமாட்சிபுரம். கலெக்டரய்யா வெச்ச பேரு செந்தமிழ் நகர். பட்டா இல்லாத இந்த இடத்துல நாங்க 30 வருஷத்துக்கு மேல குடியிருக்கோம். எல்லாரும் விவசாயக் கூலி வேலை பாக்குறோம். புறம்போக்கு இடத்துல இருக்குறதனால எங்களுக்கு கரண்ட், ரோடுனு எந்த வசதியும் செஞ்சு கொடுக்கலை. ரெண்டு கிலோ மீட்டர் தொலவு இருக்குற ஊருக்குள்ள நடந்துபோய் குடிக்க தண்ணி எடுத்துக்கிட்டு வருவோம். ஊர் பெரிய ஆளுங்க சொல்ற வேலைய செய்யாட்டி, ‘புறம்போக்கு இடத்துல இருக்குற உனக்கு என்னா திமிரு’ன்னு பேசுவாங்க. சொந்த இடம், வீடு இல்லாததனால, இதுபோல பல அவமானங்கள சந்திச்சோம். வயலோரத்துலதான் வீடுக இருக்கும். கரண்டு கிடையாது; ராத்திரி நேரத்துல வீட்டுக்குள்ள பாம்பு, பூச்சின்னு புகுந்துடும். மழைக்காலத்தில் குடிசைக்குள்ள தண்ணி வந்துடும். ரோடு இல்லாததனால எங்க ஏரியாவே சேறும் சகதியுமா ஆயிடும். பட்டா கேட்டு பத்து வருஷத்துக்கு மேல அலைஞ்சோம். எங்கள யாரும் மதிக்கவே இல்ல, எங்க வலி வேதனைய புரிஞ்சுக்கவும் இல்ல. இப்ப இருக்குற கலெக்டர்கிட்டேயும் மனு கொடுக்கலாம்னு கொடுத்தோம். எங்க குறைகளைக் கேட்டுட்டு மனுவை வாங்கி வெச்சுக்கிட்டார். நடக்கும்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்ல. ஆனா அடுத்த நாளே கலெக்டர் எங்க ஏரியாவுக்கு வந்தார். எங்களால நம்பவே முடியல. அவர உட்காரவைக்க ஒரு நாற்காலிகூட எங்ககிட்ட இல்ல. நாங்க படுற கஷ்டத்தை எல்லாம் அவர்கிட்ட கொட்டினோம். பொறுமையா கேட்டுட்டுப் போனார். அடுத்த நாளே எங்களோட 30 வருஷ கஷ்டத்துக்கு முடிவு தொடங்கிடுச்சு.
கலெக்டர், பட்டா மட்டும் கொடுக்கல… புது டிரான்ஸ்பார்மர் வெச்சு கரண்ட் கம்பம் நட்டு எங்க பகுதி முழுக்க தெருவிளக்கை எரிய வச்சார்; ரோடு போட்டுக் கொடுத்தார்; வீட்டுக்கு 5,000 ரூபாய் டெபாசிட் பணம் கட்டி கரண்ட் இழுத்துக் கொடுத்தார்; ஒவ்வொரு வீட்டுக்கும் லைட் வசதி செஞ்சு கொடுத்தார்; ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலிருந்து குழாய் பதிச்சு குடிக்குற தண்ணி எங்க பகுதிக்கே வரவச்சார். சாக்கடை வசதி செஞ்சுகொடுத்தார். எங்களுக்கு இந்த வசதிக கெடைச்ச சந்தோஷத்தவிடப் பெரிசு, இதனால கிடைச்ச மதிப்பு. ஊர்க்காரங்க இப்போ எங்கள மரியாதையா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு மாசத்துல எங்க மொத்த வாழ்க்கையையும் மாத்திட்டார். எங்க கலெக்டர் எந்த ஜில்லாவுக்குப் போனாலும் நன்றிக்கடனா அவர் பேரை நாங்க சொல்லிக்கிட்டே இருப்போம்’’ என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.
‘‘ ‘கரண்ட் கொடுத்தது உங்க வெளிச்சத்துக்காக மட்டுமில்ல, அந்த வெளிச்சத்துல பிள்ளைகள படிக்க வச்சு பெரிய ஆளாக்கணும்; எல்லோரும் அரசு வேலைக்குப் போகணும்; வாழ்க்கையும் உயரணும்’னு கலெக்டர் சார் சொன்னார்’’ என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார் மற்றொரு பயனாளியான வித்யாபதி.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பேசினோம், ‘‘விளிம்பு நிலை மக்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு வீடு கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். தங்களுக்கு என்ன தேவை என்பதை கேட்கக்கூடத் தெரியாத மக்கள் இவர்கள். குடியிருக்க சொந்த வீடிருந்தால் போதும்; வேலை செய்து பிழைத்துக் கொள்வார்கள். குடும்பத்தையும் கவனித்து பிள்ளைகளையும் படிக்க வைத்து மேலே வந்துவிடுவார்கள். தற்போது ஆறு கிராமங்கள் இதன் மூலம் பயடைந்துள்ளன. தஞ்சையின் அனைத்து கிராமங்களிலும் செந்தமிழ் நகர் இருக்க வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, இலக்கும்கூட’’ என்றார் பெருமிதத்துடன்.
மக்கள் ஆட்சியரின் இலக்கு நிறைவேறட்டும்!