தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டங்காடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. திமுகவை சேர்ந்த சிலர் ஜாதிக்கு ஒருவர் என கூட்டணி சேர்ந்து மதுக்கடையில் அனுமதியற்ற பார் நடத்துவதுடன் இரவு 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கள்ளத்தனமாக மதுவிற்பனையும் செய்கின்றனர். இங்கு பார் நடத்த அரசு அனுமதி இல்லை. ஆனால் காவல்துறை அனுமதி உண்டு என கூறுகின்றனர். இந்த கள்ள மது விற்பனையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களில் ஜாதிக்கு ஒருவர் அங்கம் வகிக்கின்றனர். இந்த கிராமம் IAS, IPS, IFS, IRS என நான்கு வகை அதிகாரிகளை உருவாக்கிய சிறப்பு வாய்ந்த கிராமம். தற்போது இந்த சிறப்பும் சேர்ந்துள்ளது. மதுபிரியர்கள் காலை போதையில் வீதிகளில் சுற்றி திரிவதால் பெண்கள் சாலைகளில் நிம்மதியாக சென்று வர முடிவதில்லை. மேலும் மதுக்கடை இருக்கும் இடம் விவசாய நிலங்களுக்கு மத்தியில் பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் அய்யப்பன் கோவில்களின் அருகில் பட்டுக்கோட்டை அறந்தாங்கி பிரதான சாலையில் உள்ளது.
போதை ஆசாமிகளால் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுகிறது. மதுஅருந்தி விட்டு காலி பாட்டில்களை வயல்வெளிகளில் போட்டு உடைக்கின்றனர். இது விவசாய கூலிகளில் கால்களை பதம் பார்த்து விடுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோன்று கள்ள மது விற்ற பொழுது நமது இதழ் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் வந்ததால் வியாபாரத்தை நிறுத்தினார்கள். ஆனால் இவர்கள் நாங்கள் பார்க்க வேண்டியவர்களை பார்த்து விட்டோம் என கூறி வியாபாரத்தை தொடர்கின்றனர். இந்தப் பகுதி பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக கூறுவது மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். கள்ள மது விற்பனையை நிறுத்த வேண்டும் என்பதே. இதையே நாமும் வலியுறுத்துகிறோம். நடவடிக்கை எடுப்பார்களா? தஞ்சை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல்கண்காணிப்பாளரும்.