பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் ப்ரியா, சென்னை மாநகராட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை களைந்து தீர்வு காணும் விதமாக மண்டலம் 4 மற்றும் 5 ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் சாலைகளில் பயணிக்க முதல்கட்டமாக தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் 69 கோடி ரூபாய் மதிப்பில் தெருவிளக்கு அமைக்கவும், பொது இடங்களில் 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கழிவறைகள் ஏற்படுத்தவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் கழிவறைகளை முறையாக பராமரிப்பு மேற்கொள்ளவும், தேவைக்கேற்ப நடமாடும் கழிவறைகள் அமைக்கவும் 5.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள இலவச பொது கழிப்பறைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதப்பட உள்ளது என்றார்.
இதனிடையே பெண் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்தை அவர்களின் கணவர்கள் பயன்படுத்துவது தொடர்பான கேள்வி மேயர் பிரியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு தங்களின் பணி என்ன என்பது தெரியும். யாருக்காக பொறுப்பு வழங்கப்பட்டதோ அவர்கள் தான் பணியை செய்ய வேண்டும். வேறு யாரேனும் தலையிட்டால், மீறினால் தலைமை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.