தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் மேலக்காடு மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் எதிரே பிரதான சாலையை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் அதிமுகவை சேர்ந்த ராஜா என்கிற நாகராஜ் என்பவர் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாகவும் இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் கிராம மக்கள் நமக்கு தகவல் தர நாமும் நேரில் சென்று விசாரித்ததில் மேற்படி தகவல் உண்மை என தெரிய வந்து கடந்த பிப்ரவரி மாத இதழில் இது குறித்து விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேலும் இது குறித்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்தோம். கோட்டாட்சியர் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து உரிய உத்தரவுகள் பிறப்பித்தும் நெடுஞ்சாலைத்துறை பேராவூரணி AD சந்திரசேகரன் பல்வேறு காரணங்களை கூறி ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றாமல் உள்ளார். பத்துக்காடு முதல் திருச்சிற்றம்பலம் வரை சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஒட்டங்காடு கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் முன்புறம் இருந்த கட்டுமானங்களை ஆக்கிரமிப்பு என கூறி உடனே அகற்ற சொன்ன கிஞி சந்திரசேகரனுக்கு நாகராஜின் கட்டிடத்தை அகற்ற மட்டும் சட்ட சிக்கல் வந்ததா? மேற்படி ஆக்கிரமிப்பு கட்டிடத்திற்கு மின் இணைப்பும் உள்ளது.
பட்டா இடத்திற்கு மின் இணைப்பு பெற பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எப்படி அனுமதி அளித்தார்கள். இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கையூட்டு பெற்று செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நெடுஞ்சாலை மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அகற்ற நீதிமன்றங்கள் மற்றும் தமிழக அரசு பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ள அதிமுக நாகராஜின் கட்டிடத்தை இடிக்க அதிகாரிகளுக்கு தயக்கம் ஏன்? ஒட்டங்காடு திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கை கூலி இவர் என்பதாலா? ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்தே ஆக வேண்டும் என்பது இந்தப் பகுதி பொதுமக்களின் கோரிக்கை. பொதுமக்களுக்கு ஆதரவாக நீதியின் நுண்ணறிவு இதழும் மேல்முறையீட்டுக்கு தயாராக உள்ளது.