திருச்சி அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் ஓராண்டுக்குப் பதில் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தைப் புதுப்பித்தால் போதும் எனத் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வணிகர்களின் இறப்புக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தியும் அறிவித்தார்.
திருச்சியை அடுத்த சமயபுரம் சந்தை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியது:
1982-இல் அதிமுக அரசு கொண்டுவந்த நுழைவு வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் வணிகர்கள் நடத்திய போராட்டத்தின்போது சென்னையில் வணிகர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தி, அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்த மே 5ஐ நினைவு கூறும் வகையிலேயே வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது.
கொரோனா காலத்தில் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூழலிலும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வணிகர்கள் நிதியை வாரிக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்கிறேன்.
மறைந்த முதல்வர் கருணாநிதிதான் கடந்த 1989- இல் வணிகர் நல வாரியத்தை அமைத்தார். பின்னர், 2007- இல் திமுக ஆட்சியில்தான் குடும்ப நல நிதியானது ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக்கப்பட்டது.
வணிகர் நல வாரியத்தில் 84,101 பேர் பதிவு செய்துள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8,875 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது. இணைய வழியில் உறுப்பினர் பதிவு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு, உறுப்பினர் கட்டணம் ரூ. 500க்கு விலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் 36,952 புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி சிரமத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு தமிழக வணிகர்களின் கோரிக்கையை கொண்டு செல்லும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இணையவழியில் அளிக்கப்படும் ஜிஎஸ்டி சேவையை தமிழில் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.
தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிப் படிவம் தாக்கல் செய்ய காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. வரி கைவிடுதல் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, இதுவரை 66 முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு, 65 இனங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வணிகர்களுக்கு யாரேனும் தொந்தரவு அளித்தால் புகார் தெரிவிக்க காவல் உதவிச் செயலியில் வணிகர் உதவிப் பிரிவானது ஒரு வாரத்துக்குள் அறிமுகம் செய்யப்படும். இந்தச் செயலியில் புகார் வந்தவுடன் ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடனே நடவடிக்கை எடுப்பர்.
வணிகர் நல வாரியத்தை மேம்படுத்த வணிகர் தரப்பிலிருந்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வாரியத்துக்குப் புத்துயிர் அளிக்கப்படும். தீ விபத்து பாதிப்பு நிதியுதவி ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக வழங்கப்படும்.
உள்ளாட்சி நிர்வாகம், அறநிலையத் துறை உள்ளிட்ட அரசுக் கட்டடங்களில் உள்ள வணிகர்களின் வாடகைப் பிரச்னைக்குத் தீர்வு காண அரசின் கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் வழிகாட்டிக் குழு அமைக்கப்படும்.
உடற்பயிற்சிக் கூடங்களுக்கு காவல் உரிமம் பெறத் தேவையில்லை. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகளால் கடைகளை இழந்து பாதிக்கப்படுவோருக்கு அரசுக் கட்டடங்களில் வாடகைக் கடைகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
பெரிய தொழிலதிபர்கள் முதல் சிறு வணிகர்கள் வரை காக்கப்பட வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். அத்தகைய பொருளாதார வளர்ச்சியை நோக்கித்தான் இந்த அரசு செயல்படுகிறது. பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் வணிகர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர்.
பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார்.
நலிந்த வணிகர்களின் வாரிசுகள் 100 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை, மூத்த வணிகர்களுக்கு வ.உ.சி. வணிகச் செம்மல் விருதுகளை முதல்வர் வழங்கினார்.
மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி. மூர்த்தி, பேரமைப்பின் திருச்சி மண்டலத் தலைவர் எம். தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்டத் தலைவர் வி. ஸ்ரீதர் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்து கொண்டனர். மாநிலப் பொதுச் செயலர் வீ. கோவிந்தராஜுலு வரவேற்றார்.