ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தின்படி மத்திய மண்டலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் முற்றிலும் கஞ்சா ஒழிக்கப்பட்டுள்ளது. குட்கா மற்றும் புகையிலை விற்றதாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 288 பேர் கைது செய்யப்பட்டதாக ஐஜி பாலகிருஷண்ன் தெரிவித்தார்.
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தின் படி, கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், ஐஜிக்கள், மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய மண்டலத்தில் ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். போதையில் சிக்கி தவிக்கும் சிறார்களை மீட்பதோடு அவர்களுக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகின்றன. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் மத்திய மண்டலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பகுதிகளில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், ஆந்திராவில் இருந்து ரயில், வாகனங்களில் மூலம் மத்திய மண்டலத்திற்கு கஞ்சா கொண்டு வரப்படுகிறது. அதிரடி நடவடிக்கையால் இலங்கைக்கு கஞ்சா கொண்டு செல்வது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. கடத்தலை தடுக்கும் வகையில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கஞ்சா, புகையிலை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தின் படி பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் காவல் சிறார் மன்றங்கள் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் புத்தகம் வாசிப்பது மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்களது கருத்துக்களையும் கேட்க வேண்டும். முதலில் அவர்களது பழக்க, வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்று அவர் கூறினார்.
அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம்:
மத்திய மண்டலத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடந்தால், அந்தந்த மாவட்டத்தை சேர்ந்து பொதுமக்கள் திருச்சி 9498100645, புதுக்கோட்டை 9498100730, கரூர் 9498100780, பெரம்பலூர் 9498100690, அரியலூர் 94981 00705, தஞ்சாவூர் 9498100805, திருவாரூர் 9498100865, நாகை 9498100905, மயிலாடுதுறை 9442626792 என்ற செல்போன் நம்பர்களுக்கு எவ்வித அச்சமின்றி உடனே தகவல் தெரிவிக்கலாம்.